சென்னை: வங்கதேசத்துக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்தானதால் அந்நாட்டைச் சேர்ந்த முதிய தம்பதி சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். வங்கதேசத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்கள் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தன. வங்கதேசம் முழுவதும் வெடித்த மாணவர்கள் போராட்டங்களில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என ராணுவ தளபதி கெடு விதித்ததால் அவர் தமது பதவியில் இருந்து விலகினார்.
மேலும் போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் இல்லத்தை முற்றுகையிட்டு சூறையாடத் தொடங்கினர். இதனால் வங்கதேசத்தை விட்டு சகோதரி ரெஹானாவுடன் ஹெலிகாப்டர் மூலம் வெளியேறினார். இந்நிலையில், வங்கதேசத்தில் நிலவும் பதற்றம் காரணமாக அந்நாட்டுக்கான விமானங்கள் கடந்த 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்திலேயே முதிய தம்பதி தவித்து வருகின்றனர். சுசில் ரஞ்சனின் மனைவி புரோவா ராணி வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மனைவி முழுமையாக குணமடையாத நிலையில் மீண்டும் வங்கதேசம் செல்வதற்காக தம்பதி சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். வங்கதேசத்தில் நிலவும் பதற்றம் காரணமாக அந்நாட்டுக்கான விமானங்கள் கடந்த 2 நாட்களாக ரத்து செய்யப்பட்ட நிலையில், வங்கதேசத்திற்கு விமான சேவை தொடங்கும் வரை உள்நாட்டு தொண்டு நிறுவனமோ அல்லது அரசோ எங்களுக்கு உதவ வேண்டும். இல்லையெனில் விமான நிலையத்திற்குள் தங்க அனுமதி அளிக்கவேண்டும் என தம்பதி கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.