பெங்களூரு: பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த ரயில் பெட்டியில் திடீரென புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து உதயன் எக்ஸ்பிரஸ் வண்டி எண் (11301) ரயில் காலை 5:45 மணி அளவில் கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்திற்கு பிளாட்பாரம் எண் 3ல் வந்து நின்றது. பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற நிலையில் காலை 7:10 மணி அளவில் திடீரென பி-1 மற்றும் பி-2 ஆகிய இரண்டு குளிர்சாதன பெட்டியில் இருந்து புகை வரத் தொடங்கியது. உடனடியாக ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்த சில நிமிடத்தில் தீயணைப்பு வீரர்கள் வந்து புகையை அணைத்தனர். இதனால் பெரியளவில் சேதம் தவிர்க்கப்பட்டது. புகை வந்த ரயில் பெட்டியில் பயணிகள் யாரும் இல்லாமல் இருந்ததால் உயிரிழப்பு எதுவும் நடக்கவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக ரயில் நிலைத்தில் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ரயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.