சத்தியமங்கலம்: பெங்களூருவில் ரூ.2 கோடி கேட்டு மிரட்டி காரில் கடத்தப்பட்ட சட்டக்கல்லூரி மாணவரை பவானிசாகர் அருகே சோதனை சாவடியில் போலீசார் மீட்டனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே பெரிய கள்ளிப்பட்டி காவல்துறை சோதனைசாவடியில் நேற்று முன்தினம் இரவு பவானிசாகர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் ஹரிஷ்குமார் பணியில் இருந்தார். நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தபோது, சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வேகமாக சென்ற காரை காவலர் ஹரிஷ்குமார் தடுத்து நிறுத்தி உள்ளார்.
அப்போது, காரில் இருந்த ஒரு நபர் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என கூச்சல் போட்டுள்ளார். உடனே காவலர் ஹரிஷ்குமார் அவர் யார்? என விசாரித்தபோது காரில் உள்ளவர்கள் அந்த நபருக்கு பைத்தியம் எனக் கூறி, காரை நகர்த்த முயன்றனர்.
அப்போது, காவலர் ஹரிஷ்குமார் காருக்குள் இருந்த நபரை கையை பிடித்து இழுக்கவே அவர் காரில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து காரில் இருந்த மற்ற 4 பேரும் காரை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் விசாரித்தபோது, அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹெப்பால் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் இஸ்ரவேல் (21) என்பதும், இவர் பெங்களூரு சட்டக் கல்லூரியில் எல்எல்பி 2ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
நேற்று முன்தினம் மதியம் பெங்களூருவில் இஸ்ரவேலை சந்தித்த 4 பேர் கும்பல் அவரது வீட்டை வாடகைக்கு எடுப்பதற்காக பார்க்க வந்துள்ளதாகவும், அதற்கு முன்பணம் கொடுக்க அருகில் உள்ள ஏடிஎம்மிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறியதை நம்பி காரில் ஏறியுள்ளார். ஆனால், அவர்கள் ஏடிஎம் செல்லாமல், நீ முத்துவின் பையன் தானே உன்னை வைத்து உன் அப்பாவிடம் ரூ.2 கோடி பணம் கேட்க வேண்டும் என மிரட்டி வாயைப் பொத்தி காரில் கடத்தி வந்துள்ளனர்.
பெரிய கள்ளிப்பட்டி சோதனை சாவடியில் போலீசார் காரை தடுத்து நிறுத்தியபோது, வாக்கி டாக்கி சத்தம் கேட்டதால், போலீஸ் இருப்பதை அறிந்து உடனே சுதாரித்து கொண்டு வாலிபர் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளார். இதைத்தொடர்ந்து காவலர் அவரை காப்பாற்றியுள்ளார். இந்த நிலையில் காரில் இருந்தவர்கள் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க நபர்கள் எனவும், அவர்கள் மலையாளம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.