பெங்களூரு: பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள அடுக்குமாடி வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் 4வது மாடியில் பிரபலமான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் இருந்த சிலிண்டர் வெடித்து தீ பற்றி எரிய தொடங்கிய நிலையில் கட்டிடம் முழுவதுமாக தீ பரவியுள்ளது.
கீழ் தளத்திலிருந்து மூன்றாம் தளம் வரை தீ பரவிய நிலையில் நெக்ஸா கார் ஷோரூம் இருந்துள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்ட உடனாக மேலே இருந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறும் பரபரப்பான காட்சிகள் வெளியாகியுள்ளது. சிலிண்டர் வெடித்த பிறகாக கார் ஷோரூமில் இருந்த கார்களும் பற்றி எரிய தொடங்கியது.
தீயை அணைப்பதற்காக சுமார் 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தீ விபத்து ஏற்பட்ட போது மேல் மாடியில் பலர் சிக்கி கொண்டனர். அவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக மேலே இருந்து கீழே குதிக்கும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் பலர் மேலே இருந்து குதித்து தங்களின் உயிரை பாதுகாத்து கொள்வதற்காக குதித்ததால் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டடத்தின் உள்ளே இருந்த அனைவரையும் மீட்டு விட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் தொடர்ந்து ஒன்றரை மணி நேரமாக தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.