“உழுதவன் கணக்குப் பார்த்தால், உழக்கு கூட மிஞ்சாது’’ என்பது பழமொழி. ஆனால் உழவன் கணக்கிட்டு உழவு செய்தால் கணிசமான வருவாய் ஈட்டமுடியும் என்ற புதுமொழியுடன் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் இன்றைய விவசாயிகள். திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் தனது 2 ஏக்கர் நிலத்தில் பந்தல் காய்கறிகளை விளைவித்து, அவற்றை நேரடி விற்பனை முறையில் விற்று நல்ல லாபம் பார்த்துவருகிறார். தனது நிலத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயி சக்திவேலை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம். நம்மை மகிழ்ச்சியாக வரவேற்று தனது விவசாய அனுபவம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.
“கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம்தான் முதன்மைத் தொழிலாக விளங்குகிறது. இந்தப்பகுதிகளில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து சிறுதானியப் பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர புடலங்காய், கோவக்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை விளைவிப்பதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதில் புடலங்காய் குறுகியகாலப் பயிராக, அதாவது நடவு செய்த 25 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடுவதால் அதிக விவசாயிகள் புடலங்காய் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்வதை விட, அவற்றை விற்பனை செய்வது மிக முக்கியமானதாக உள்ளது. விவசாயத்தில் விற்பனையில் லாபம் இல்லை என்றால் நாம் உழைத்த உழைப்பு எல்லாம் வீணாகிவிடும். இதனால்நேரடி விற்பனையில் இறங்கி லாபத்தை பல மடங்கு பார்க்கலாம் என்று முடிவெடுத்து களத்தில் இறங்கி விடுகிறார்கள்.
அதிக நிலம் வைத்திருக்கும் பெரிய விவசாயிகளுக்குத்தான் விவசாயம் ஒத்து வரும். குறைந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கெல்லாம் அது சரிவராது என்ற கருத்து விவசாயிகள் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது. இந்த கருத்தை தகர்க்கும் வகையில் 2 ஏக்கர் நிலத்தில் சீசனுக்கு ஏற்றாற்போல், பல்வேறு வகையான காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறேன். இந்த சீசனுக்கு கொடி வகை பயிரான புடலங்காய், பாகற்காய் ஆகியவை சிறந்த பலன் கொடுக்கும். இவை வேகமாகவும் வளரக்கூடியது. அதேபோல இந்தக் காய்கறிகளை சரியான முறையில் பராமரித்தால் மகசூலும் சிறப்பாக இருக்கும். அதை மனதில் வைத்துதான் பந்தல் காய்கறிகளை பயிரிடலாமென முடிவெடுத்தேன்.
காய்கறி விதைகளை நேரடியாக கொடியில் நட்டு வளரவிடாமல் நாற்றுகளைத் தனியாக வளர்த்து, அதன்பின் கொடிப்பந்தலுக்கு நட வேண்டும். முதலில் நாற்றுகளை வளர்ப்பதற்கு நிலப்பரப்பை பதப்படுத்தி விதைகளை நிலத்தில் நட வேண்டும். அவ்வாறு நட்ட விதைகள் வளர்வதற்கு தண்ணீர் மற்றும் இயற்கை உரங்களைத் தெளித்து வந்தால் தரமான நாற்றுகளாக வளரும். வளர்ந்த நாற்றுகளை 15வது நாளில் பிடுங்கி பந்தல்களுக்கு கீழ் நட்டு வளர்க்க வேண்டும்.முதலில் விவசாயத்திற்கு தேர்ந்தெடுத்த நிலத்தை 3 அல்லது 4 முறை உழவு செய்து மண்ணை இலகுவாக்க வேண்டும். கடைசி உழவின்போது மக்கிய தொழு உரத்தை இட்டு 2 மீட்டர் இடைவௌியில் 6 செ.மீ அகலத்தில் வாய்க்கால் எடுத்து நிலத்தை தயார்படுத்த வேண்டும். எனது 2 ஏக்கர் நிலத்திற்கு மொத்தம் 2 டன் மக்கிய தொழு உரங்களை பயன்படுத்தினேன். பிறகு அந்த வாய்க்காலில் 1.5 மீ இடைவௌியில் 45 செ.மீ நீளம், ஆழம், அகலம் கொண்ட குழிகளை எடுத்து தொழுஉரத்துடன், மேல் மண் கலந்து நிரப்பி வைத்தேன். ஒரு ஹெக்டேருக்கு 1 முதல் 1.30 கிலோ வரை விதைகள் தேவைப்படும்.
ஒரு குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்றிட வேண்டும். விதை நட்ட 8 முதல் 10 நாட்களில் முளைக்கத் தொடங்கிவிடும். நிலத்தின் ஓரங்களில் மரங்களை நட்டு கம்பிகளை வளைத்து கட்டியும், நிலத்தில் சவுக்கு உள்ளிட்ட கம்புகளை நட்டும் பந்தல் அமைப்போம். செடியில் சணல் கயிறுகளைக் கட்டி, அதை பந்தலில் உள்ள கம்பியில் கட்டிவிடுவோம். இதன் மூலம் புடலங்காய் செடியானது சணல் கயிற்றின் மூலம் மேலே பரவி பந்தல் முழுவதுமாக புடலங்காய் கொடியாக நன்கு படந்து காய்க்கத் தொடங்கிவிடும். இதன்மூலம் எளிமையான முறையில் எந்த இடையூறும் இல்லாமல் புடலங்காய் காய்த்துத் தொங்கும்.
விளைச்சலைப் பொறுத்து வாரத்திற்கு இரண்டு முறையோ, அல்லது வாரம் ஒருமுறையோ அறுவடை செய்யலாம். எனது நிலத்தில் நான் பயிரிட்ட காய்களான புடலங்காய், பாகற்காய், கோவக்காய், சுரக்காய், பீர்க்கன்காய் ஆகியவற்றில் மட்டும் ஏக்கருக்கு ₹80 ஆயிரம் வீதம் 2 ஏக்கருக்கு ₹1.60 லட்சம் வரையில் லாபம் கிடைக்கிறது. அதேபோல, பந்தல் காய்களில் அவ்வப்போது பூச்சித்தாக்குதலும் இருக்கும். இந்த பூச்சிகள் பந்தலுக்கு வரும் முன்பாகவே தடுக்க வேண்டும். விவசாயத்தில் வரும் முன் காப்பதே சிறந்தது. இதற்காக வேளாண் துறை அதிகாரிகளை அணுகி, அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தெளிப்போம். விவசாயத்தில் வருமுன் காப்பதே சிறந்தது. இதை உணர்ந்து செயல்படுகிறோம்.
ஒரே பயிரை நம்பி இருந்தால் நஷ்டம் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதனால்தான் நான் பலபயிர் சாகுபடியில் இறங்கியிருக்கிறேன். நான் உற்பத்தி செய்கிற காய்கறிகளை பெரும்பாலும் நானே உழவர் சந்தைக்குக் கொண்டு சென்று, நேரடியாக விற்பனை செய்து வருகிறேன். அதுமட்டுமின்றி எனது வீடு திருவண்ணாமலை – சென்னை மெயின் ரோட்டில் உள்ளதால் பொதுமக்கள் நேரடியாக வாங்கிச்செல்லும் வகையில் எனது வீட்டின் எதிரிலேயே காய்கறிகளை விற்பனை செய்து வருகிறேன். மொத்த வியாபாரிகளிடம் கொண்டு போனால் குறைந்த விலைக்கே கேட்கின்றனர். எனவே நான் விளைவிக்கும் பொருட்களை நானே மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறேன். சந்தை விலையை விட ₹5 வரை விலை குறைவாகத்தான் விற்பனை செய்கிறேன். சீசனுக்கு ஏற்றார் போல் காய்கறிகள் பயிரிடுவதால், நல்ல லாபம் கிடைக்கிறது. அதோடு 2 கறவை மாடுகள் வைத்துள்ளதால், அதன்மூலமும் வருவாய்
கிடைக்கிறது’’ என்கிறார் சக்திவேல்.
தொடர்புக்கு:
சக்திவேல் – 80720 98835