தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் காய்கறி சந்தையில் வரலாறு காணாத அளவிற்கு வாழையிலையின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்ட காய்கறி சந்தைக்கு கோரம்பள்ளம், உடன்குடி, செபத்தையாபுரம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகப்படியான வாழை இலைகள் தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு மழையின் அளவு குறைவாக இருந்ததால் வாழையின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. நீரின் அளவு குறைந்ததால் வாழைமரத்திற்கு கிணறுகளில் இருந்து மோட்டார் மூலம் விவசாயிகள் நீரை பாய்ச்சி வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு பொதுவாக 600 வாழையிலை கட்டுகள் வருவது வழக்கம்.
ஆனால், தற்போது 300 முதல் 350 இலை கட்டுகள் மட்டுமே வந்துள்ளது. அதுமட்டுமின்றி இன்று முதல் ஆவணி மதம் பிறப்பு மற்றும் நாளை முதல் முகூர்த்த நாள் தொடங்குவதால் வாழையிலையின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. சிறிய வாழையிலை கட்டுகள் பொதுவாக ரூ.1000 முதல் ரூ.1,500 வரை விற்பனையாவது வழக்கம். ஆனால், தற்போது ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை விற்பனையாகிறது. பெரிய வாழையிலை கட்டு ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.