Friday, June 20, 2025
Home செய்திகள் தடைகளை தகர்த்தெறியுங்கள்!

தடைகளை தகர்த்தெறியுங்கள்!

by Porselvi

வாழ்வில் செல்வம் வேண்டும்,புகழ் வேண்டும், எல்லாம் வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதுமா? முயற்சி வேண்டாமா? நிழலை நோக்கிச் சென்று நிழலை பிடிக்க முடியுமா? ஒளியை நோக்கிச் சென்றால்தான் நிழல் நம் பின்னால் வரும்.எங்கே ஊக்கமும்,விடாமுயற்சியும் இருக்கிறதோ, அங்கே செல்வம் வழிகேட்டுக் கொண்டு வரும். யாரிடம் விடாமுயற்சி இருக்கிறதோ, அவரிடம் இறைவனின் அருள் இருக்கிறது. விடாமுயற்சி இருக்கிறவனிடம்தான் அதிர்ஷ்டக் கதவு திறக்கிறது.அமைதியான மனதுடன்,தெளிவான சிந்தனையுடன், மிகுந்த நம்பிக்கையுடன், முகமலர்ச்சியுடன் அளவில்லா ஆர்வத்துடன் தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொண்டு செய்யும் காரியங்களே சாதனைகளாக மலருகின்றன. சில வேலைகளில் நமது செயல்கள் சிறப்பாக இருந்தாலும் சாமானியர்கள் அதன் மதிப்பை உணராதவர்களாக இருப்பார்கள். வைரத்திற்கும், சாதாரண கற்களுக்கும் வேறுபாடுகளை உணர முடியாதவர்கள் மத்தியில் நாம் அறிந்து கொள்ளப்படாமல் இருக்கலாம். வைர வியாபாரியால் மட்டுமே வைரத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள முடியும்.அந்த நாள் வரும் வரை நமது நிலையும் உயரும். அதுவரை உழைத்துக் கொண்டும்,செயல்பட்டுக் கொண்டும், பொறுமையாக காத்திருங்கள்.

பயனற்ற செயல்கள், பயனற்ற வீண் உரையாடல்கள், பயனற்ற சிந்தனைகள் நமது சக்தியையும், நேரத்தையும் வீணாக்குகின்றன. நமது சம்பந்தம் இல்லாத வெட்டிப் பேச்சுகள் நமது பொன்னான நேரத்தை மண்ணாக்குகின்றன.ஆகவே ஒரு செயலை செய்யும் முன் திட்டமிட்டு தெளிவான சிந்தனையோடு செய்ய வேண்டும். அதில் பயன் விளையுமா என்று பார்க்க வேண்டும். அப்போதுதான் அதிர்ஷ்டவாசல் நமக்காக திறந்து கொள்கிறது.நாம் எப்போதுமே வாய்ப்பை தேடி அலைகிறோம். அதுவோ நம்மை தேடி வருகிறது. ஆனால் நமக்கு அதை அறிந்து கொள்ளும் விழிப்புணர்வு இருப்பதில்லை.விழிப்புணர்வோடு இருப்பவர்கள் தான் வாய்ப்பைக் கண்டு கொள்கிறார்கள். மகத்தான
சாதனைகளை புரிகிறார்கள்.சின்ன நூலிழைப்போல படரும் தீய பழக்கம்தான் காலப்போக்கில் உடைக்க முடியாத சங்கிலியாக நம்மை வளைத்துப் போட்டு விடுகிறது. தீய பழக்கங்களைக் கண்டு நாம் அஞ்சி ஓட வேண்டும். கோழிக்குஞ்சு முட்டையை உடைத்துக் கொண்டு வெளியே வருகிறது.விதைகள் பூமியை பிளந்து கொண்டு தலைநிமிர்கிறது.கூட்டுக்குள் பல நாட்கள் உண்ணாமல் தவம் இருக்கும் புழு, கூட்டை உடைத்துக் கொண்டு பட்டாம் பூச்சியாக வெளியே வருகிறது. எத்தனை பெரிய பலமான தடைகள் நம்மில் இருந்தாலும் அதை உடைத்துக் கொண்டு வெளியே வர துணிந்தால் மட்டுமே நம்மால் சாதனை சிகரத்தை தொட முடியும். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிசா உன்னிராஜன், 2024ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்த ஊக்கமளிக்கும் வெற்றிக் கதையை பார்ப்போம்.40 வயதில் இரண்டு இளம் குழந்தைகளின் தாயான, செவித்திறன் குறைபாடுடன் வாழ்ந்து வரும் நிசா. குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டும் இருந்தார்.தனது ஏழாவது முயற்சியில் இந்தியாவின் மதிப்புமிக்க தேர்வில் தேர்ச்சி பெற்று இலட்சியத்தை அடைய எதுவும் தடையில்லை என்று நிரூபித்திருக்கிறார்.தனது இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு தான் இந்தப் பயணத்தில் கால் பதித்தார். ஆனால் யூபிஎஸ்சி தேர்வு எழுத போகிறேன் என்று சொன்னபோது அவரைப் பலரும் கேலி செய்தனர். ஆனால் அதையெல்லாம் நிஷா உன்னி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.வேலை, குடும்பம் மற்றும் படிப்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்துவது சிறிய சாதனையல்ல. நிசா விடியற்காலையில் எழுந்து படிப்பில் ஈடுபடுவார், பின்னர் குடும்ப வேலைகளை செய்வார். அதன் பிறகு பணிக்கு செல்வார். அலுவலகத்திற்கு செல்வதற்கு பெரும்பாலும் ரயில் பயணம் மேற்கொள்வார். அந்த பயணங்களின் போது கிடைக்கும் நேரத்தில் படித்து வந்தார்.இப்படி எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்போதெல்லாம் புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டே இருப்பார்.

11 வயது நந்தனா மற்றும் 7 வயது தன்வி ஆகியோருக்கு ஒரு தாயாக தனது பொறுப்புகளை செய்துவந்த நிசா, மென்பொறியாளரான அவரது கணவர் அருண் ஆதரவுடன் தாமதமான வயதிலும் உறுதியுடன் தனது இலட்சிய பயணத்தை தொடர்ந்தார். நிசா தனது 35 வயதில் தான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை தீர்மானித்தார்.நிஷாவின் தந்தை ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி உன்னிராஜன் மற்றும் அவரது தாயார் ஜெய ஆகியோரின் அசைக்க முடியாத ஆதரவுடன், ஊக்கத்துடன் தனது ஐ.ஏ.எஸ் கனவில் ஒருபோதும் பின் வாங்காமல் தொடர்ந்து பயணித்தார்.யூபிஎஸ்சி தேர்வை பலமுறை எழுதி பலமுறை தோல்வி அடைந்தார். ஒவ்வொரு தோல்வியின் போதும் அவரது கணவரும்,பெற்றோரும் அவருக்கு தொடர்ந்து ஊக்கத்தை தந்தார்கள். அதன் பலனால் நிசா உன்னி ஏழாவது முயற்சியில் யூபிஎஸ்சி தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அவரது ரேங்க் 1,000மாக இருப்பினும், அவர் மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் இருப்பதால், அவர் இந்திய நிர்வாக சேவை (IAS) ஆட்சிப் பணியைப் பெற்றார்.

மாநிலத் தலைநகரில் உள்ள ஒரு தனியார் அகாடமியில் அவர் பெற்ற பயிற்சி அவரது வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.கோட்டயம் துணை-கல்வியாளர் ரஞ்சித்திடமிருந்தும் நிசா உத்வேகம் பெற்றார், அவரும் செவித்திறன் குறைபாடுள்ளவர் மற்றும் அதே அகாடமியில் பயிற்சி பெற்றார். சாதனையாளர்களின் நிஜ வாழ்க்கைக் கதைகள் மற்றும் வாழ்க்கை வரலாறுகளை புத்தகங்களில் படித்தும், ஊக்கமளிக்கும் வீடியோக்களைப் பார்த்தும் நிசா உன்னி தன்னை தொடர்ந்து ஊக்கப் படுத்திக் கொண்டார். அதுவே அவரது அன்றாட வாழ்க்கையாகவே மாறியது. சாதனையாளர்களின் பட்டியலில் தன்னுடைய பெயரையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற இலக்கை கனவாக மாற்றிக்கொண்டு, அந்தக் கனவை நிஜமாக்கியுள்ளார் நிசா உன்னி.

நிசாவின் சாதனை என்பது ஒரு தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல, பொதுவாகவே பெண்கள் கல்லூரி படிப்பை முடித்த பின்பு திருமணம் என்ற பந்தத்தில் சென்ற பின்பு தனது இலட்சியங்களை தொலைத்து விட்டு வாழக்கூடிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. ஆனால் அத்தகைய பெண்களாலும் சாதிக்க முடியும், சாதிப்பதற்கு வயது ஒருபோதும் தடையில்லை என்பதை இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் சாதித்த நிஷா உன்னி அவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. அதிகாரமளித்தல், விடாமுயற்சி மற்றும் தடைகளை தகர்த்தெறிதல் ஆகியவற்றை கொண்ட நிஷா உன்னி வாழ்க்கை சக்திவாய்ந்த கதையாகும். இவரைப்போல நீங்களும் சாதிக்க வேண்டும் என்றால் முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள்..! உங்கள் மீது நீங்கள் ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ளாமல் எப்போதும் நம்பிக்கை கொள்ளுங்கள்.உங்கள் திறமையை நீங்களே நம்பாவிட்டால் வேறு யார் நம்புவார்கள்? உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொண்டு செயல்படுங்கள்,தடைகளை தகர்த்தெறியுங்கள்,வெற்றி பெறுங்கள்!

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi