உடன்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பஞ்சலிங்கம் முன் எடுத்த படத்தை பேஸ்புக் வலை தளத்தில் பதிவேற்றியுள்ளார். இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு வருவோர் செல்பி எடுப்பது, பிற பக்தர்களுக்கு இடையூறாக செல்போனில் படம் பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக செல்போன் பயன்படுத்த கோர்ட் தடை விதித்தது. இதனையும் மீறி கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் கைங்கரியம் செய்பவர்கள் செல்போன் கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன் சாமி தரிசனம் செய்தார். பஞ்சலிங்க சுவாமிகளையும் வழிபட்டார். இந்நிலையில் அவரது பேஸ்புக் வலைதளத்தில் திருச்செந்தூர் கோயில் பஞ்சலிங்க சுவாமிகள் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல மாதங்களாக பஞ்சலிங்க சுவாமிகள் பகுதிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது மரபு. ஆனால் கவர்னரே விதிமுறைகளை மீறுவது, எந்த விதத்தில் நியாயம்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.