சென்னை: அதிர்ஷ்டத்துக்கான ஆன் லைன் விளையாட்டுகளை தடை செய்து இயற்றப்பட்ட சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை. திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது என்று வாதிடப்பட்டது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் வாதிடும்போது, சட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது. தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, செப்டம்பர் 13ம் தேதி இந்த வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகளில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்க முடியாது.
அதிர்ஷ்டத்துக்கான ஆன் லைன் விளையாட்டுகளை தடை செய்தது செல்லும். திறமைக்கான ஆன் லைன் விளையாட்டுகளான ரம்மி, போக்கர் விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகள் ரத்து செய்யப்படுகிறது. ஆன் லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.