
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘ருத்ரன்’ படத்தை ஏப்ரல் 24 வரை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில், இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸ் ஆப் குளோபல் என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.
இதற்காக ரூ.12 கோடி செலுத்த ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் ரூ.10 கோடி செலுத்தியிருந்தது. இந்நிலையில் மீதமுள்ள தொகையை செலுத்த வேண்டும் என கூறிய தயாரிப்பு நிறுவனம், திடீரென ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இந்நிலையில் ‘ருத்ரன்’ திரைப்படத்தை வெளியிட அனுமதித்தால் ரூ.10 கோடி அளவிற்கு இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் ரெவன்ஸ் ஆப் குளோபல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஃபைவ் ஸ்டார் எனப்படும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இந்த இடைக்கால தடையால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இடைக்கால தடையால் நிறுவனம் பெருமளவு பாதிக்கப்படும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், திரைப்படத்தின் வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை வேறு யாருக்கும் வழங்கக்கூடாது எனவும் படத்தை திரையரங்கம், ஓடிடி, சேட்டிலைட் ஆகியவற்றில் வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையையும் நீக்கி நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலமாக திட்டமிட்டபடி ‘ருத்ரன்’ திரைப்படம் நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.