களக்காடு: களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர் வனப்பகுதியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவில் கனமழை பெய்தது. இதனைத்தொடர்ந்து வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்கு செல்லவும், நம்பியாற்றில் குளிக்கவும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதேபோல் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையினால் தலையணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தடுப்பணையை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. இதனால் தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வன சரகர் யோகேஸ்வரன் அறிவித்துள்ளார். அதேநேரத்தில் தலையணையை சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.