திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஐப்பசி மாத பவுர்ணமியான நாளை மறுதினம் (28ம் தேதி) அன்னாபிஷேக விழா நடைபெறுகிறது. அதையொட்டி, மாலை 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா நாளை மறுதினம் நடைபெறுகிறது.
இந்நிலையில், பவுர்ணமி கிரிவலம் மற்றும் அன்னாபிஷேகம் காரணமாக, அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய அதிகளவில் பக்தர்கள் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தரிசன நேரம் மற்றும் தரிசன வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 28 மற்றும் 29ம் தேதிகளில் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் மட்டும் வழக்கம்போல அனுமதிக்கப்படும். மேலும், 3ம் பிரகாரத்தில் தரிசன வரிசையை அனுமதிப்பதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
எனவே, தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறையும் வாய்ப்புள்ளது. அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, நாளை மறுதினம் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு பிறகு வழக்கம்போல தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே, குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.