சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளில் நடைபெறும் பயிற்சி மையங்களுக்கு (கோச்சிங் சென்டர்) தடை விதிக்க வேண்டும் அல்லது வரையறை செய்ய வேண்டும் என மாநில கல்விக் கொள்கை குழு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு மாநிலத்திற்கு ஏற்ப பிரத்யேக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட குழு இந்த பரிந்துரையை முன்னெடுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் 3 மொழிக் கொள்கை, 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, கல்லூரி நுழைவுத் தேர்வு ஆகியவை இடம்பெற்று இருந்தது. மேலும், தேசிய அளவில் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அமல்படுத்தப்பட்டது. தேசிய கல்விக் கொள்கைக்கு பாஜ அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டில் அமல்படுத்த மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
ஒன்றிய கல்வித்துறையின் தேசிய கல்விக்கொள்கையை ஏற்காத தமிழ்நாடு அரசு, வரலாறு, மரபு, மாணவர்களின் எதிர்காலம், வளர்ச்சிடையும் நவீன தேவை ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலத்திற்கு ஏற்ப பிரத்யேக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்தது. இதற்காக ஓய்வுபெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சுமார் 2 வருடங்களாக பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து கருத்துகளை கேட்டு, தமிழ்நாட்டிற்கான பிரத்யேக மாநில கல்விக் கொள்கையை உருவாக்கி, அதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 2024, ஜூலை 1ம் தேதி ஒப்படைத்தது.
இதில் நீட் விலக்கு, இருமொழி கொள்கை, மாநில பட்டியலில் கல்வி, 9ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு கிடையாது, 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தன.
இந்த கொள்கை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், மாநில கல்விக் கொள்கை குழு, தமிழ்நாடு அரசிற்கு முக்கிய பரிந்துரையை வைத்துள்ளது. அதாவது, பள்ளிகளில் இயங்கும் பயிற்சி மையங்கள், பாடத்திட்டங்களை முழுமையாக முடிக்காமலேயே நுழைவுத் தேர்விற்கு மட்டும் பயிற்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், பள்ளிகள் உள்ளேயே நடைபெறும் பயிற்சி மையங்கள் அல்லது பள்ளிகளுடன் இணைப்பு பெற்று நடத்தப்படும் பயிற்சி மையங்கள் பாடத்திட்டத்தைக் காட்டிலும் மாணவர்களுக்கு நுழைவு தேர்விலேயே அதிக கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுபோன்று இயங்கும் பயிற்சி மையங்களுக்கு தமிழ்நாடு அரசு தடைவிதிக்கவோ அல்லது வரையறுக்க குழு அமைத்து முறைப்படுத்தவோ வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் ஜேஇஇ, நீட், கிளாட், க்யூட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த, பயிற்சி மையங்களை பள்ளிகளின் நிர்வாகத்திலேயே இயக்கி வருகிறது. அப்படி இயக்கப்படும் பள்ளிகள் அந்தந்த வகுப்புகளுக்கான பாடங்களை முழுமையாக முடித்து, மாணவர்களுக்கு முறையான கல்வியை வழக்குவதைக் காட்டிலும், நுழைவுத் தேர்விற்கான பயிற்சியிலேயே அதிக கவனம் செலுத்தும் தகவலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால், மாணவர்கள் முறையான கல்வியை பெறாமல், மனப்பாடம் செய்து தேர்விற்காக மட்டும் பள்ளிகளுக்கு செல்லும் மனநிலை உருவாக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தேசிய கல்விக்கொள்கை
* 3 வயதில் கல்வி தொடங்க வேண்டும்.
* ஏற்கனவே உள்ள 10, +2 கல்வி கட்டமைப்பு மாற்றி அமைக்கப்படுகிறது.
* 3, 4 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள்.
* முதல் வகுப்பு 6வது வயதில் தொடங்க வேண்டும்.
* இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை பொது நுழைவுத்தேர்வுகள் மூலம் நடத்தப்படும்.
* ஒருநபர் பலமுறை ஒருபடிப்பில் சேர்வது, பின்பு வெளியேறுவதை அனுமதித்தல்.
* மும்மொழிக் கொள்கை.
* 15 ஆண்டுகளுக்கு பிறகு இணைப்பு முறையை ரத்து செய்தல்.
மாநிலக் கல்விக்கொள்கை
* பள்ளி சேர்க்கைக்கு முன்னதாக விளையாட்டு செயல்பாடுகள் மட்டுமே கற்பித்தல்.
* ஏற்கனவே உள்ள கல்வி முறையுடன் தொடர்வது.
* 10ம் வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு.
* 5 வயதில் முதல் வகுப்பு தொடங்குதல்.
* 11, 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை.
* பலமுறை சேர்க்கை மற்றும் வெளியேறுதல் கிடையாது.
* 2 மொழி மட்டுமே.
* இணைப்பு முறையுடன் தொடர்வது.