இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நடந்து வருகின்றது. இந்நிலையில், சமீபத்தில் உக்ருலில் நடந்த ஷிருய் லிலி திருவிழாவுக்கு, அரசு சார்பில் பத்திரிகையாளர்கள் மணிப்பூர் மாநில போக்குவரத்து கழக பேருந்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அப்போது பேருந்தை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் ‘மணிப்பூர்’ என்று எழுதப்பட்ட வார்த்தையை மறைக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை பாதியில் கைவிட்டு இம்பாலுக்கு திரும்பினர்.
இந்த சம்பவத்துக்கு மணிப்பூர் ஒருமைப்பாடு ஒருங்கிணைப்பு குழு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் மாநில அரசின் அதிகாரத்தை குறைத்து மதிப்பீடு செய்யும் செயல் என்று கண்டித்து, 48 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. அதையடுத்து நேற்று மணிப்பூரின் முக்கிய நகரங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
*மணிப்பூரில் என்ஐஏ சிறப்பு நீதிமன்றம்
மணிப்பூரின் சூரசந்த்பூரில் உள்ள அமர்வு நீதிமன்றமானது, தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரிக்கும் இன வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றமாக நியமிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டு மே 3ம் தேதி அன்று தொடங்கிய இன வன்முறை தொடர்பான மூன்று முக்கிய வழக்குகளை தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரித்து வருகின்றது. இதில் ஜிரிபாமில் 6 பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது மற்றும் பிற வன்முறை சம்பவங்களும் அடங்கும். சிறப்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு மணிப்பூர் முழுவதும் நீட்டிக்கப்படும்.