கும்மிடிப்பூண்டி: கவுன்சிலர் கூட்டத்தில் செயல் அலுவலரை கண்டித்து அலுவலகம் முன்பு அப்பகுதி, மக்களுடன் பாமக கவுன்சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினார். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் பேருராட்சி மன்ற தலைவர் சகிலா அறிவழகன் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு செயல் அலுவலர் யமுனா, துணை தலைவர் கேசவன், கவுன்சிலர்கள் கருணாகரன், குப்பன், ரவி, பூபதி, தீபா, ஜோதி, கரீம், காளிதாஸ், கீதாராணி, எழுத்தர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து வரவு, செலவு, கணக்கு, இறப்பு, பிறப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்பு ஒவ்வொரு கவுன்சிலர்கள் வரவு, செலவு கணக்கு பற்றி கேள்வி கேட்டனர்.
அதற்கு ஏற்கனவே கடந்த கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு இதுவரை பதில் வரவில்லை ஜூன் மாத செலவு கணக்கு ரூ.47.63 லட்சம் முறைகேடாகவும், வரி வசூல், வாகன வசூல், பொருட்கள் வாங்குதல், பொக்லைன் இயந்திரம் பணி செய்தல் இதற்கான அனைத்து ரசீதுகளும் போலியானது என கேள்விகள் எழுப்பப்பட்டதற்கு செயல் அலுவலர் வாய் திறக்காமல் மௌனம் சாதித்ததாக கூறப்படுகிறது. பின்னர், 5வது வார்டு கவுன்சிலர் கருணாகரன் பேசுகையில் சாய்பாபா, நகர்சாய், கிருபா நகர், தக்ஷிணாமூர்த்தி கோயில் ஆகிய பகுதிகளில் மின்னழுத்தம் அதிகமாக உள்ளது. உடனடியாக புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கவும், கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் நடைபாதை கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனை உடனடியாக அப்புறப்படுத்தி சீரமைக்க வேண்டும் என பேசினார். 3வது வார்டு கவுன்சிலர் அப்துல் கரீம் வரவு, செலவு கணக்கில் பல குளறுபடிகள் உள்ளது. இதற்கான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் எனவும் சரமாரியாக பேசினார். 11வது வார்டு பாமக கவுன்சிலர் ஜோதி இளஞ்செல்வம், நாட்டாமைக்கார தெருவில் லாரி ஒன்று சென்றதால் தண்ணீர் செல்லும் குடிநீர் பைப்புகள் உடைந்து சேதமாக்கியுள்ளது. இதனை சரி செய்ய கேட்டதற்கு சரி செய்ய முடியாது என அலட்சியத்தோடு பதில் சொன்னதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து கவுன்சிலர் ஜோதி இளஞ்செல்வம் கண்டனத்தை தெரிவித்தார்.
இதைதொடர்ந்து, கூட்ட தொடர் முடிந்த பிறகு மேற்கண்ட அப்பகுதியை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் கவுன்சிலருடன் சேர்ந்து செயல் அலுவலர் யமுனாவை கண்டித்து அவர் அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பேரூராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கவுன்சிலர்கள் கூறுகையில், பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா சில ஆண்டுகளாக போலி பில்களை வைத்து பணம் வசூல் செய்து, மறைமுகமாக கவரப்பேட்டை தனியார் பள்ளி அருகே பணம் பெற்று வருவதும் அம்பலமாகி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் யமுனாவை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.