புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி தல்காத்ரா மைதானத்தில் நடந்த விழாவில் தலைவர் கார்கே பங்கேற்று பேசியபோது,’ ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி அஞ்சுகிறார். ஏனெனில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டால் அனைவரும் தங்கள் பங்கைக் கோரத் தொடங்குவார்கள் என்று அவர் பயப்படுகிறார். நீங்கள் உண்மையில் நாட்டில் ஒற்றுமையை விரும்பினால், நீங்கள் வெறுப்பை பரப்புவதை நிறுத்த வேண்டும். எமக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேண்டாம். வாக்குச் சீட்டுதான் வேண்டும். மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்புவதற்காக காங்கிரசார் இந்திய அளவில் ஒற்றுமை யாத்திரை நடத்த வேண்டும்.
பாஜவிடம் கூட்டாட்சி தன்மை இல்லை. கோடீஸ்வர தொழிலதிபர் அதானியின் செல்வம் ஆபத்தில் இருப்பதால், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவில் அவருக்கு நிறைய தொடர்பு உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறி அவர்களை ஒதுக்கித் தள்ள வேண்டும். தேர்தல் பற்றி நான் பேச விரும்பவில்லை, ஆனால் அனைத்து ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாக்குகளும் வீணாகப் போகிறது என்று நான் உறுதியாகக் கூறுவேன். அவர்கள் அனைவரும் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க வேண்டும்.
அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தங்களிடம் வைத்திருக்கட்டும். எங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேண்டாம், வாக்குச் சீட்டில் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் நிலை என்ன, எங்கு நிற்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். இதுபற்றி மற்ற அரசியல் கட்சிகளிடமும் நாங்கள் பேசுவோம். இதற்காக ராகுல் காந்தி ஒரு இயக்கத்தைத் தொடங்க வேண்டும்’ என்றார்.