திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு பேருந்து மோதி முட்டை ஏற்றி சென்ற லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லட்சக்கணக்கான முட்டைகள் சாலையில் கொட்டி வீணாகின. பல்லடம் அடுத்த நந்தவனம்பாளையத்திலிருந்து காளிவேலம்பட்டி என்ற இடத்திற்கு கறிக்கோழி குஞ்சுகள் உற்பத்திக்கு லட்சக்கணக்கான முட்டைகள் லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கண்டைனர் லாரி ஒன்று முட்டைகளை ஏற்றி கொண்டு பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது பின்னல் வந்த அரசு பேருந்து லாரி மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்ததில் லாரியில் ஏற்றி செல்லப்பட்ட லட்சக்கணக்கான முட்டைகள் சாலையில் சிதறி வீணாகின. நல்வாய்ப்பாக விபத்தில் எவருக்கும் காயம் ஏற்பட வில்லை. இதை அடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் சாலையில் கவிழ்ந்து கிடக்கும் லாரியை அப்புறப்படுத்தினர்.