திருப்போரூர்: கடந்த 10 ஆண்டு காலமாக சீர் செய்யப்படாமல் இருந்த காப்பு காடுகள் வழியாக செல்லக்கூடிய சாலைகள் சீர் செய்ய நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார். திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி வெளியிட்ட அறிக்கை: கடந்த 10 ஆண்டு காலமாக காப்பு காடுகள் வழியாக செல்லக்கூடிய பல்வேறு துறையின் சாலைகளுக்கு வனத்துறையின் அனுமதி இல்லை என்கிற காரணம் சொல்லி அந்த சாலைகள் சீர் செய்யப்படாமல் விடப்பட்டது.
திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் இதுபோன்று கிராமங்களை இணைக்கக்கூடிய முக்கியமான சாலைகள் சீரழிந்து பெரும் பள்ளத்தாக்குகளாக மாறி இருந்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், இந்த சாலைகளை உரிய அனுமதி பெற்று சரி செய்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதன் அடிப்படையில், கடந்த 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட் மானிய விவாத கோரிக்கையின்போது, வனத்துறை மானிய கோரிக்கையில் இதுகுறித்து விரிவாக பேசி, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன்.
தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் வனத்துறை அதிகாரிகள் மற்றும் உரிய துறைகளுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார். அதன்படி, திருப்போரூர் தொகுதியில் உள்ள பல்வேறு காப்பு காடுகள் பகுதி சாலைகளுக்கு வனத்துறை அனுமதி பெறப்பட்டது.
மிக மிக குறிப்பாக, செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றத்திற்கு பொன்விளைந்த களத்தூர் பகுதியில் உள்ள சாலை மிக மிக முக்கிய இணைப்பு சாலையாகும். இந்த சாலைக்கு அனுமதி பெறப்பட்டு நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து உரிய நிதியை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஒதுக்கி தந்தார்.
தற்போது ஒப்பம் கோரப்பட்டு சாலைப் பணிகள் துவக்கப்பட்டது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஏ.வ.வேலுவுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது, வனத்துறை பகுதியில் அமைந்துள்ள சாலை மட்டுமே சீரமைக்கப்படுகிறது. ஏனைய பகுதி பாதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. மேலும், இந்த சாலையில் தற்போது தனியார் பேருந்து மட்டுமே இயங்கி வருகிறது.
எனவே, கிராம மக்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசனிடமும், என்னிடமும் மீதம் உள்ள பகுதியின் சாலைகளையும் சீரமைத்து அரசு பேருந்து இந்த தடத்தில் இயக்கிட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். இதனை தமிழ்நாடு முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.