நெல்லை மாவட்டத்தில், பொதிகை மலைச்சாரலில் தென்காசிக்கு ஐந்து கிலோ மீட்டர் வடக்கே, இயற்கை எழில் நிறைந்த அழகான சூழலில், அமைந்துள்ள திருத்தலம் ஆய்க்குடி. ஆயர்குடி என்ற சொல்லின் திரிபு. கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான ஆய்வள்ளல் வாழ்ந்து வந்த சிற்றூர் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற பழமையும் பெருமையும் வாய்ந்த புண்ணியத்தலம். அருகில் உள்ள சாம்பவர் வடகரை என்ற ஊரில் ராமாயண காலத்தில் ஜாம்பவான் தன் வழிபாட்டிற்காக சிவன் கோயில் கட்டமுயன்ற போது, அனுமன் தன் தவ வலிமையினால் நீரைக் கொணர்ந்த அனுமன் நதி சிறு வாய்க்காலாகப் பாய்ந்து ஓடும் சிறு கிராமம் சித்தபுருஷர் ஒருவர் முருகனை உபாசித்து அவருடன் ஐக்கியமான இச்சிற்றூரில் அந்த முருகன் சின்னஞ்சிறு பாலகனாக நின்று அருளாட்சி புரிந்து வருகிறான்.
வலிமையான வஜ்ராயுதத்தையும் சக்தி வேலையும் தன் இருகைகளில் ஏந்தி, கால்களில் தண்டையும் சலங்கையும் அணிந்து, அழகிய மயிலின் முகம் தன் இடப் புறத்திலுமாக, நின்ற திருக்கோலத்தில் ஒன்றரை அடி உயர மூர்த்தமாகப் பச்சிளம் பாலகனாக அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி என்ற திருநாமம் ஏற்று, ஆயர்குடி கோயில் கருவறையில் அழகிய குமரக் கடவுள் காட்சியளிக்கிறார்.சுமார் 1850-ஆண்டுகளுக்கு முன் மல்லன் என்ற முருக பக்தன் ஆயர்குடியின் கிழக்குப் பகுதியில் நன்செய் நிலப் பரப்பில் பச்சேரிமேடு என்ற இடத்தில் அந்த பாலசுப்பிரமணியனது அழகிய சிலையைக் கண்டெடுத்து, அதை அனுமன் நதிக்கரையோரமாக ‘கோயில் திருத்து’ என்ற இடத்தில் வைத்து சில காலம் வழிபட்டு வந்தான்.
பின்னர், அந்த சிலையை வல்லாளகண்ட தேவர் என்ற முருகபக்தர் தன் வீட்டினருகே அரச மரத்தடியில் வைத்து, தான் தொழுது வந்த அம்பிகை பராசக்தியுடன் பால முருகனையும் பூஜித்து வந்தார். தொடர்ந்து அருள் மிகு பால சுப்பிர மணியரை நிரந்தரமாகக் கோயிலில் எழுந்தருளச் செய்ய ஆயர்குடிவாசிகள் ஆயத்தங்கள் மேற்கொண்டனர் கேரள பண்டிதர்களைக் கொண்டு ப்ரச்னம் பார்த்ததில், முருகனை உபாசித்து வந்த தெய்வீக சித்த புருஷர் ஒருவர் அனுமன் நதிக்கரையில் ஜீவ சமாதியாகி, அந்த குமரக் கடவுளிடமே ஐக்கியமாகி விட்டதாகத் தெரிய வந்தது. அந்த சித்த புருஷரே குமரக்கடவுள் என்று ப்ரச்னம் கூறியதாம். இதையடுத்து பாலசுப்பிரமணியரின் மூர்த்தம் அந்த சித்தர் சமாதிக் கருகில் தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஒரு வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரம் கூடிய சுபமுகூர்த்த நன்னாளில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும், அந்த ப்ரச்ன சாஸ்திரம் கூறிய படி, அந்த சித்தபுருஷர் கோயிலுக்குப் பின்புறம் உள்ள புற்று ஒன்றில் சர்ப்ப ரூபத்தில் இன்றைக்கும் இருந்து வருவதாகக் கூறுகிறார்கள். வல்லாள கண்ட தேவர் குடும்பத்தினர் பரம்பரையாக அதற்குப் பௌர்ணமி தோறும் பால் வார்த்து வழிபடுகிறார்கள். இதன் காரணமாக அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குக் ‘கரையாளர்’ என்று பெயர் வந்தது. சித்த புருஷர் பூஜித்து வந்த கணபதி, பார்வதி, பரமேஸ்வரன், ஸ்ரீ விஷ்ணு, சூரிய பகவான் ஆகிய பஞ்சாயதன பூஜையின் மூர்த்தங்களும் இக்கோயில் கருவறையில் மூலவரான பாலசுப்பிரமணியர்க்குப் பின்புறம் எழுந்தருளியுள்ளனர்.
கடந்த 90-ஆண்டுகளுக்கு முன்னால் வரை பாலமுருகனது கருவறை தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூரையுடனிருந்ததாம். பின்னர், இப்போதுள்ள விமானத்துடன் கூடிய கருவறையும், தொடர்ந்து அர்த்த மண்டபம், மகா மண்டபம், பிராகாரங்கள் என சீராகக்கட்டப்பட்டனவாம். சித்திரை மாதப் பிறப்பு முதல் சில நாட்கள் சூரியனின் கிரணங்கள் மூலவர் பாலசுப்பிரமணியரின் மீது விழுவது இக்கோயிலின் சிறப்பு அம்சமாகும். அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமியின் மூலவர் மூர்த்தத்தைப் போன்று வடிக்கப்பட்டுள்ள ஆகிய பஞ்சலோக விக்கிரகமாகக் காட்சியளிக்கும் உற்சவ மூர்த்தி, முத்துக்குமார சுவாமி’ என்று பெயருடன் விளங்குகிறார்.
அவருக்கு இடது புறமாக முருகனது சேனாதிபதியான வீரபாகுவும், வலது புறம் சக்தி வேலும் பஞ்சலோக விக்கிரகங்களாக வீற்றிருக்கின்றனர். ஆயர்குடி இத்தலத்தின் பிரதான தல விருட்சம் அரச மரமாகும். அரசுடன் வேம்பு, கருவேப்பிலை, மாதுளை, மாவிலங்கு ஆகிய ஐந்து மரங்களும் பஞ்சதல விருட்சங்களாக இக்கோயிலின் மூலவர் சந்நதிக்குப் பின்னால் விமானத்தின் கீழ் மேற்குப் பிரகாரத்தில் ஓங்கி வளர்ந்துள்ளன.
அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி விரும்பிப் பருகும் நிவேதனம் படிப்பாயசம் என்று கூறப்படுகிறது. இதை, ‘‘புக்த பாலகை ஹி சார்த்தம் புஜ்யதே மானம் ஸூபாயஸம்’’ என்று தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. சஷ்டி விரதம் இருந்து முருகனுக்கு நிவேதனம் செய்து அருகில் உள்ள அனுமன் நதி படித்துறையில் பாயசத்தை வார்த்து குழந்தைகளைப் பருகச் செய்வது இத்தலத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும். பக்தர்கள் அளிக்கும் படிப்பாயசத்தை விரும்பிப் பருக பாலகன் உருவில் பாலசுப்பிரமணமிய சுவாமியும் வருவதாக ஒரு ஆழ்ந்த நம்பிக்கை இத்தலத்து மக்களிடையே நிலவுகிறது.
ஒரு சமயம் பாலசுப்பிரமணிய சுவாமியின் பக்தர் ஒருவரது கனவில் தோன்றி, தன்னைப் போன்ற குழந்தைகளுக்குப் படிப்பாயசம் ஊற்றி, தனக்கு நிவேதனம் செய்தால் அவருக்குப் புத்திர பாக்கியம் ஏற்படும் என்று கூறியருளியதாகவும், அவ்வாறு நடந்ததாகவும் கர்ணபரம்பரையாகச் சொல்லப்பட்டு வருகிறது. அன்று முதல் பாலசுப்பிரமணிய சுவாமிக்குப் படிப்பாயசம் வார்த்து குழந்தைகளுக்குப் பருகச் செய்வது வழக்கத்தில் வந்ததாகக் கூறப்படுகிறது. புத்திர பாக்கியம் பெறவும், தமது இடர் களைந்து, சௌபாக்கியத்தை அளிக்கவும் இவ்வாறு பால சுப்பிரமணிய சுவாமிகளை வேண்டிக் கொண்டு படிப்பாய சம் ஊற்றும் நிகழ்ச்சி அடிக்கடி நடந்து வருகிறது.
‘துலா பாயசம்’ என்ற பெயருள்ள (துலாம் என்பது நெல்லை மாவட்டத்தில் வழக்கிலிருந்து வந்த ஒரு நிறுத்தல் அனைவயாகும்) இந்த நிவேதியத்திற்கு பதினொரு படி பச்சரிசியும், ஒருபடி பயத்தம் பருப்பும் பாலுக்காக 108-தேங்காய்கள் அல்லது அதற்கு ஈடாக அறுபது லிட்டர் பசுவின் பாலும் முப்பத்தைந்து கிலோ சர்க்கரையும், தேவையான அளவு நெய், ஏலக்காய், முந்திரி, திராச்டை, கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து படிப்பாயசம் தயாரிக்கப்படுகிறதாம். இவ்வாறு சஷ்டி விரதமிருந்து புத்திரப் பேறு பெற்ற வாணிய செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர், நடுவில் பச்சைக்கல் பதித்து, சுற்றிலும் வைரக்கற்கள் பதித்த தங்கத்தினாலான ‘வேல்’ ஒன்றை பாலசுப்பிரமணிய சுவாமிக்குக் காணிக்கையாக அளித்தாராம். அதன் மதிப்பு இன்றைக்கு ஒரு கோடி இருக்கும் என்று ஆயர்குடி பக்தர்கள் கூறுகின்றனர்.
ஆயர்குடி பாலசுப்பிரமணியர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல உற்சவங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. முருகப் பெருமான் அவதரித்த வைகாசி விசாகம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மற்றொன்று கந்த சஷ்டி திருவிழா தனிச் சிறப்பு வாய்ந்தது. திருச்செந்தூர் செந்தில் முருகன் கோயில் ஆகம முறைப்படியே இக்கோயிலிலும் சஷ்டி விழா நடத்தப்படுகிறது. அங்கு பன்னீர் இலையில் விபூதி பிரசாதம் அளிப்பது போன்று ஆயர்குடி பாலமுருகன் கோயிலில் அரசு கொடியேற்ற தினத்தன்று ஆயர்குடியின் மல்லபுரம் ஏரியின் அருகில் உள்ள அனுக்ஞைகணபதியின் அருளாசி பெற்று சஷ்டி விழாச் சடங்குகள் ஆரம்பிக்கப்படுகிறது.
கந்தசஷ்டி விழாவின் சூரசம்ஹார நிகழ்ச்சிகள் அருகில் உள்ள அருள் மிகு சௌந்தர்ய நாயகி சமேத காலகண்டேஸ்வரர் கோயில் அருகில் ரதவீதியில் யுத்த களம் ஏற்படுத்தப்பட்டு, திருகாலகண்டேஸ்வரரிடம் சக்தி வேல் பெற்ற பின் ஆரம்பமாகிறது.ஆயர்குடியைச் சுற்றியுள்ள பகுதியில் வெற்றிலை பயிரிடும் இலை வாணிப சமூகத்தினர் சூரசம்ஹாரத்தில் பங்கு பெறும் வீரபாகு மற்றும் சூரபத்மனது சேனை களாகவும், யானை முகன், சிங்கமுகன், மகாசூரபத்மன் ஆகிய மரத்தினாலான மற்றும் முகங்கள் தயாரித்து மூன்று பக்தர்கள் சூரர்களாக வேடம் தரித்து சூரசம்ஹாரத்தில் பங்கு கொள்வது ஒரு சிறப்பு அம்சமாகும். இதன் காரணமாக அந்த சமுதாயத்தினருக்கு ‘சேனை குலத்தார்’ என்று பெயர் வந்ததாம்.
தவிர, இந்த இலை வாணிப சமூக இளைஞர்கள் ஒரு மண்டல காலம் இத்திருக்கோயில் பஜனம் இருந்து, பாலமுருகனுக்குப் பால் குடமும் காவடியும் தூக்கிய பின்னரே திருமணம் செய்து கொள்வர் என்றும் கூறப்படுகிறது.ஆதியில் மல்லன் பாலசுப்பிரமணிய சுவாமியைக் கண்டெடுத்தால் அவனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிப்பதுபோல அவர்கள் வணங்கி வந்த பனையடியான், கருப்பசாமி ஆகிய கிராம தேவைகள் பாலசுப்பிரமணிய கோயிலின் தென் புறமாகவும், எதிர் பக்கமாகவும் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
அது போன்று மல்லனுக்குப் பிறகு பாலமுருகனது சிலா மூர்த்தத்தை பூஜித்து பரிபாலித்து வந்த வல்லாள கண்ட தேவர் பரம்பரையினருக்கு கந்த சஷ்டி விழா கொடியேற்று தினத்தன்று தன் மரியாதை செய்யப்படுகிறது. தவிர, அவர்கள் ஆண்டுதோறும் விஜயதசமியன்றும், தைப் பொங்கலன்றும் பிரவேட்டை உற்சவம் நடத்தி வருகின்றனர். தவிர, இரண்டு அந்தணர்களுக்கு விருந்து உபசாரம் செய்வதும் உண்டாம்.
இதுவே பாலசுப்பிரமணிய சுவாமிக்கு நிவேதனமாகவும், சித்த புருஷர்களுக்குப் பிச்சையாகவும் கருதப்பட்டு அதன் பின்னரே உச்சிக் கால பூஜை நடத்துவது இன்றைக்கும் வழக்கமாக இருந்து வருகிறது. மேலும், ஒரு வாரம் நடைபெறும் கந்த சஷ்டி விழாவில் ஆயர்குடி பகுதியைச் சேர்ந்த பல சமூகத்தினர் ஒவ்வொரு நாள் பூஜை வைபவத்தை ஏற்றுக் கொண்டு நடத்துவது சமுதாய ஒற்றுமை, ஒருமைப் பாட்டை வளர்க்க வகை செய்கிறது.
டி.எம்.ரத்தினவேல்