சென்னை: நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
செல்வப்பெருந்தகை; “இறைவனுக்கு இணையாக எதுவுமில்லை எனும் இறைப்பற்றையும், பகிர்ந்துண்ணும் பழக்கத்தை போதிக்கும் நாளாகவும், தியாகத்தின் உன்னதத்தையும் உணர்த்தும் நாள் பக்ரீத் திருநாள். தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது தியாகத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்னலத்திற்காக பிறரை பலி கொடுக்கும் இவ்வுலகில், தான் பெற்ற ஒரே மகனையும் தியாகம் செய்யத் துணிந்த இறைத்தூதர் இப்ராஹீம். அவரின் அர்ப்பணிப்பை, தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்ந்து, அவரது வழியில் அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியவற்றை நம் வாழ்க்கையில் கொண்டுவரவேண்டும்.
இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவரும் ஏற்றத்தையும், இன்பத்தையும், அமைதியையும் பெற்று வளமுடன் வாழ எனது ‘பக்ரீத்’ நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்: “தியாகத்தை போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவனின் விருப்பத்திற்கு கீழ்படிந்து நடப்பதே வாழ்க்கையின் உண்மையான நெறி என்பதை உலகிற்கு பறைசாற்றும் இந்நாளில் ஏழை, எளியோருக்கு உதவி செய்தல், தவறிழைப்போரை மன்னித்தல், பகமையை நீக்குதல், தானம் தர்மம் செய்தல் போன்ற திருக்குரானின் உயரிய போதனைகளை பின்பற்றி, ஒற்றுமையோடும், சகோதரத்துவத்தோடும் வாழ்ந்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.
இறை நம்பிக்கை உள்ளவர்கள் எத்தகைய தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தை எடுத்துரைக்கும் இப்புனித திருநாளில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் மலரட்டும் என வாழ்த்தி மீண்டும் ஒருமுறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
எல்லோரிடமும் இறை உணர்வும் தியாகச் சிந்தனையும் சகோதரத்துவமும் மலரட்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.