*வியாபாரிகள், மக்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்
நெல்லை : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் மற்றும் கோழிகள் வாங்கிச் செல்ல நேற்று அதிக கூட்டம் காணப்பட்டது. சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
சந்தை சாலையில் கடும் கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தென்மாவட்டங்களில் எட்டயபுரம் சந்தைக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை ஆடுகள், கோழிகள் விற்பனை நடந்து வருகிறது.
இச்சந்தைக்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் கேரள வியாபாரிகளும் ஆடுகள் விற்பனைக்கு வந்து செல்வது வழக்கம். மேலப்பாளையம் சந்தையில் அதிகபட்ச விற்பனை எப்போதுமே ரம்ஜான், பக்ரீத் மற்றும் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் நடப்பது வழக்கம்.
பக்ரீத் பண்டிகை வரும் 7ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், நேற்று சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர். உயிர் தியாகம் என்பதை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையில், தான் கண்ட கனவுக்கு ஏற்ப, இறை தூதர் இப்ராகிம் தனது மகனையே பலியிட துணிந்தார்.
அல்லாஹ் அதை தடுத்து நிறுத்தி, மகனுக்கு பதிலாக ஒரு செம்மறியாட்டை பலியிட கேட்டுக் கொண்டார். இதையொட்டி உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையின் போது ஆடுகளை வாங்கிச் சென்று ஏழை, எளியோருக்கு இறைச்சி தானமாக வழங்குவர். இவ்வாண்டுக்கான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை வாங்கிச் செல்ல நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
சந்தையில் வெள்ளாடு, செம்மறி ஆடு, வேலி ஆடு, பொட்டு ஆடு உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகள் விற்பனைக்கு வந்தன. நாட்டு ரக ஆட்டுக்குட்டிகள் ரூ.2 ஆயிரம் தொடங்கி ரூ.30 ஆயிரம் வரை மதிப்புள்ள ஆடுகள் சந்தையில் விற்கப்பட்டன.
பக்ரீத் பண்டிகையை ஒட்டி எப்போதும் போல் இவ்வாண்டும் வெள்ளாடுகளை விட செம்மறி ஆடுகளை வியாபாரிகள் அதிகம் கொண்டு வந்திருந்தனர். செம்மறி ஆடுகளை எடைக்கு ஏற்ப வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்து வாங்கிச் சென்றனர். ஆடுகள் ரூ.8 ஆயிரம் தொடங்கி, ரூ.25 ஆயிரம் வரை விலை போயின. அதில் சில ஆடுகள் ரூ.50 ஆயிரத்திற்கும், ஒரு ஆடு ரூ.65 ஆயிரத்திற்கும் விலை போனது.
சந்தைக்கு வெளிப்பகுதியில் உள்ள டக்கரம்மாள்புரம் ரோட்டில் இருபுறமும் கோழிகள் விற்பனையும் சூடுபிடித்தது.இதுகுறித்து சந்தை வியாபாரிகள் கூறுகையில், ‘‘பக்ரீத் பண்டிகையை ஒட்டி அதிகளவு ஆடுகளை சந்தைக்கு கொண்டு வந்துள்ளோம்.
வெள்ளாடுகளை விட செம்மறி ஆடுகள் விற்பனை இங்கு அதிகம் உள்ளது. வியாபாரிகளும், இஸ்லாமியர்களும் செம்மறி ஆடுகளை குர்பானிக்காக அதிகளவில் வாங்கிச் சென்றனர். 20 கிலோ தொடங்கி 40 கிலோ வரையிலான செம்மறி ஆடுகளுக்கு நல்ல விலை இருந்தது. நேற்று ஒரே நாளில் சுமார் 4 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடந்தது’’ என்றனர்.
ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை காரணமாக மேலப்பாளையம் சந்தை சாலையில் நேற்று கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சந்தைக்குள் ஆடுகளை மினி லாரிகளில் கொண்டு செல்வோரும், அங்கிருந்து ஆடுகளை வாங்கி கொண்டு திரும்புவோரும் சாலையில் திரண்டதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், தெருக்கள் வழியே வாகனங்கள் வெளியேறின.
குர்பானி மகத்துவம்
பக்ரீத் பண்டிகையில் சிறப்பு அம்சமாக கருதப்படும் குர்பானியில் முஸ்லீம்கள் ஆடுகளையோ அல்லது கால்நடைகளையோ பலியிட்டு, அவற்றின் இறைச்சியை 3 பங்காக பிரிக்கின்றனர். அதில் ஒரு பங்கை நண்பர்கள், உறவினர்களுக்கு அளிக்கின்றனர்.
மற்றொரு பங்கை ஏழைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தருகின்றனர். மீதமுள்ள பங்கை தங்கள் வீட்டிற்கு பயன்படுத்துகின்றனர். குர்பானியின் சேவை அடிப்படையில் மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை நேற்று அமோகமாக இருந்தது.