Tuesday, April 16, 2024
Home » ஆசை காட்டி மிரட்டிய பாஜ: அடிபணிந்து மயங்கிய அன்புமணி; ஒரே ஒரு அக்ரிமென்ட்டால் எடப்பாடி ஷாக்

ஆசை காட்டி மிரட்டிய பாஜ: அடிபணிந்து மயங்கிய அன்புமணி; ஒரே ஒரு அக்ரிமென்ட்டால் எடப்பாடி ஷாக்

by Ranjith

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளர் தேர்வும் நடந்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுகவில் கூட்டணி இன்னும் முடிவாகாத நிலையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர், தேமுதிகவிடம் மட்டும் பேச்சு வார்த்தை நடத்தினர். பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு யாரும் செல்லவில்லை. ஆனால் விழுப்புரத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம், பாமக நிறுவனத்தலைவர் ராமதாசை 3 முறை சந்தித்து பேசினார். ஆனால் பாமக தலைவர் அன்புமணி, பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என கூறினார். இதற்கிடையில் பாமகவுடன் பாஜ ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது.

அதிமுக பக்கம் செல்லவிடாமல், பாஜ பக்கம் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிமுக குழுவினருடன் பாமக வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சி.வி.சண்முகத்துடன் நடத்திய சந்திப்பு பேச்சுவார்த்தை மூலம் ஒரு மேல்சபையும், 7 தொகுதியும் தருவதாக உறுதியானது. அதேபோல தேமுதிகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக சென்றதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த உற்சாகத்துடன் இருந்து வந்தார்.

தேமுதிக ஒரு மேல்சபை உறுப்பினர் பதவி வேண்டும் என்பதில் விடாபிடியாக இருந்து வருவதால் ஒப்பந்தம் இழுபறியில் சென்றது. இந்நிலையில் அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதியானதால் அதிர்ச்சியடைந்த பாஜ, அவர்களின் மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுத்ததாக கூறப்படுகிறது. டாக்டர் அன்புமணி மீதான வழக்கு ஒன்று நிலுவையில் இருந்து வருவதாகவும், அதனை கையில் எடுப்பதுடன், வருமான வரித்துறை மூலம் ரெய்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ரகசிய மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் பாமகவுக்கு ஒரு மேல்சபை, மந்திரி பதவி, கேட்கும் தொகுதிகள் வழங்கப்படும், தேர்தல் செலவுகளை கவனித்துக் கொள்வோம் எனவும் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. இதனால் அதிமுகவுடனான பேச்சுவார்த்தையை பாமக தரப்பில் உறுதி செய்யாமல் இழுத்தடித்து வந்தனர். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் கேட்ட சீட் மட்டும் தான் கிடைக்கும். தேர்தலில் போட்டியிட்டாலும் எந்த தொகுதியிலும் வெற்றி பெறமுடியாது. பணமும், உழைப்பும் வீணாகிப்போகும்.

அதே நேரத்தில் பாஜவுடன் சேர்ந்தால் எம்பி, மந்திரி பதவியுடன் வழக்கு மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என உறுதியாக நம்பினர். ஆனால் பாமகவினர் அதிமுகவுடனான கூட்டணியை விரும்பி வந்தனர். ஏனென்றால் கடந்த சட்டமன்ற தேர்தலில் கேட்ட பணம் முழுமையாக கிடைத்தது. இவ்வாறு கட்சிக்குள்ளேயே குழப்பம் ஏற்பட்ட நிலையில், அதிமுகவுடன் கூட்டணி சேருவதில் புதிய நிபந்தனை விதிக்கப்பட்டது. வரும் சட்டமன்ற தேர்தலில் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்.

அதற்கான உறுதியை கொடுக்கும்பட்சத்தில் கூட்டணி தொடருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என பாமக தரப்பில் உறுதியாக கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கப்பப்பட்டது. இதனால் அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். கூட்டணி பேச்சுவார்த்தையில் அவர்கள் கேட்ட தொகுதி கொடுப்பதாக கூறிவிட்ட பிறகு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கேட்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த தேர்தலை பொறுத்தவரையில் நமக்கு முக்கியம் கிடையாது.

பாமக கூட்டணியில் வந்தாலும் பிரச்னை இல்லை. வராமல் போனாலும் பிரச்னை இல்லை என எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் தெரிவித்துவிட்டார். மேலும் அவர்கள் விருப்பம் போல கூட்டணி சேரட்டும் எனவும் கூறிவிட்டார். இதனால் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை அதிமுக குழுவினர் நிறுத்திவிட்டனர். இதையடுத்து பாமக தலைவர் அன்புமணி, பாஜவுடன் கூட்டணிக்கு தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் டெல்லி செல்லதிட்டமிட்டுள்ள அவர், பாஜ தலைவர்களை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

20 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi