சென்னை: தமிழகம் முழுவதும் பாஜவில் உறுப்பினர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. பாஜவில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நாளை (2ம் தேதி) நாடு முழுவதும் தொடங்குகிறது. டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் உறுப்பினராக பிரதமர் மோடி தனது உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக் கொள்கிறார். அன்றைய தினமே தமிழ்நாட்டில் சென்னையிலும் உறுப்பினர் சேர்க்கை தொடங்குகிறது. மூத்த தலைவரான எச்.ராஜா முதல் உறுப்பினராக இணைகிறார்.
இந்த உறுப்பினர் சேர்க்கையின் போது பழைய உறுப்பினர்களும் தங்கள் உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொள்ளலாம். புதிதாகவும் உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க பாஜ தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு மண்டலத்துக்கும் இதற்காக தனியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மண்டலத்துக்கு எச்.ராஜா, விழுப்புரம் மண்டலத்துக்கு துணை தலைவர் சக்கரவர்த்தி, மதுரை மண்டலத்துக்கு ராம சீனிவாசன், திருச்சி மண்டலத்துக்கு கருப்பு முருகானந்தம், கோவை மண்டலத்துக்கு எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மேற்பார்வையில் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும். ஒவ்வொரு பூத்திலும் குறைந்தப்பட்சம் 200 பேரை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தீவிர உறுப்பினராக சேரக்கூடியவர்கள் 50 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
உறுப்பினர் சேர்க்கைக்காக பாஜவினர் வீடு வீடாக செல்கின்றனர். அப்போது ‘8800002024’ என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும். அந்த எண்ணுக்கு வரும் லிங்கை திறந்து அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு விடை எழுதி அனுப்பினால் போதும். உடனே அவர்கள் உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்களுக்கு உறுப்பினர் அட்டையும் வழங்கப்படும். இந்த உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து 45 நாட்கள் நடத்த பாஜவினர் திட்டமிட்டுள்ளனர்.