வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஒட்டப்பட்டி ஊராட்சி மேலூர் பகுதியை சேர்ந்தவர் லாலா என்கிற சுப்பிரமணி (32). இவர் நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் தகவலின்படி குடும்பத்தினர் அவரை மீட்டு பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.
சுப்பிரமணி மீது, பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சில நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர், அதே பகுதியை சேர்ந்த எஜமான் (எ) கமலக்கண்ணனுக்கு ரூ.200 கடன் கொடுத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, போதையில் இருந்த சுப்பிரமணி, அந்த பணத்தை திரும்ப கேட்டு, எஜமானிடம் தகராறு செய்து தாக்க முயன்றுள்ளார். அதை தடுக்க வந்த எஜமானின் தங்கை கண்மணி, தாய் உமா ஆகியோரையும் தாக்க முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த எஜமான் (32), அவரது தம்பி கார்த்திக் (28), உறவினர் செல்வராஜின் மகன்கள் அருண்பாண்டியன் (26), அலெக்ஸ் பாண்டியன் (23), மற்றொரு உறவினர் மகன் பெரியசாமி (26) ஆகிய 5 பேரும் சேர்ந்து, சுப்பிரமணியை அங்குள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள தூணில் கை, கால்களை கட்டிப் போட்டு சரமாரியாக தாக்கினர். மேலும், காய்கறி நறுக்கும் கத்தியால் சுப்பிரமணியை எஜமான் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்ததும் 5 பேரும் தப்பியதும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுப்பிரமணி இறந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, எஜமான் உள்ளிட்ட 5 பேரையும் நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.