ஜம்மு: ஜாமீனில் வெளியே வரும் தீவிரவாதிகளை கண்காணிப்பதற்காக அவர்களின் கணுக்காலில் ‘ஜிபிஎஸ் டிராக்கர்’ கருவியை பொருத்தும் முறையை ஜம்மு காஷ்மீர் போலீஸ் நடைமுறை படுத்தி உள்ளனர். ஜம்மு – காஷ்மீர் காவல்துறை கடுங் குற்றவாளிகள், தீவிரவாதிகளை கைது செய்கிறது. பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வருகின்றனர். மீண்டும் அவர்கள் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுகின்றனர். அதனால் அவர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக நாட்டிலேயே முதல்முறையாக ‘ஜிபிஎஸ் டிராக்கர் (ஆங்க்லெட்)’ என்ற கருவியை சம்பந்தப்பட்ட நபரின் கணுக்காலில் பொருத்தி விடுகின்றனர். இவ்வாறு சம்பந்தப்பட்ட நபரின் காலில் பொறுத்துவதால், அவரின் செயல்பாடுகளை போலீசாரால் கண்காணிக்க முடியும்.
அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் கடுங்குற்றவாளிகள் ஜாமீன் அல்லது பரோலில் செல்லும் போது, அவர்களின் கணுக்காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும். அதேபோல் வீட்டுக்காவலில் உள்ள குற்றவாளிகளையும் இவ்வாறாக கண்காணிப்பார்கள். இதுகுறித்து ஜம்மு – காஷ்மீர் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்படி, உபா போன்ற சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு ஜிபிஎஸ் டிராக்கர் பொருத்தப்படுகிறது. தீவிரவாதி ஒருவர் இடைக்கால ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகினார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும் கூட, அவரை தொடர்ந்து கண்காணிக்க ஜிபிஎஸ் டிராக்கரை அவருக்கு பொருத்துமாறு உத்தரவிட்டது’ என்றனர்.