புதுடெல்லி: பீகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி குறைந்த விலையில் நிலங்களை பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது குறித்து சிபிஐ அதிகாரிகள் லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி, இரண்டு மகன்கள், மகள் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், மனைவி ராப்ரி தேவி, துணை முதல்வர் தேஜஸ்வி ஆகியோர் ஆஜராகினார்கள். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவிற்கு சிபிஐ ஆட்சேபனை தெரிவிக்காததை அடுத்து லாலு, ராப்ரி தேவி, தேஜஸ்விஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.