திருவெறும்பூர்: திருச்சியில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருச்சி கீழகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(46). இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக உள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் உள்ளது. இவரது மனைவி மாலதி கடந்த சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இவரது வீட்டில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் 3 பீர் பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி, அதில் திரியை பொருத்தி தீ வைத்து ரவிசந்திரன் வீட்டின் மீது அடுத்தடுத்து வீசினர். இதில் ஒரு பாட்டில் வெடிக்கவில்லை. 2 பாட்டில்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் மீது விழுந்து வெடித்தது. இந்த சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரவிசந்திரன் எழுந்து வந்து பார்த்தார். மேலும், இதுபற்றி திருவெறும்பூர் போலீசில் புகார் அளித்தார். டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்தனர்.
இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராகுல்(22), குணசேகரன் மகன் சச்சின்(24), ராஜசேகர் மகன் ராக்கி (எ) ராகேஷ் (22), முருகானந்தம் மகன் லோகேஷ்(23) ஆகிய 4 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ரவிச்சந்திரன் வீட்டின் அருகில் உள்ள பாலக்கட்டையில் தினமும் மாலை நேரங்களில் இவர்கள் 4 பேரும் அமர்ந்து மது அருந்துவது வழக்கம். இதனை ரவிச்சந்திரன் கண்டித்து வந்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை பயமுறுத்துவதற்காக வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் லோகேஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.