ராய்பூர்: சட்டீஸ்கரில் நடந்து முடிந்த பேரவை தேர்தலில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து அரசியல் விமர்சகர்கள் சில கருத்துகளை முன்வைத்துள்ளனர். “சட்டீஸ்கரின் கான்கேர், சூரஜ்பூர், துர்க், முங்கேலி, மஹாசமுந்த் ஆகிய தொகுதிகளில் நடந்த பாஜ தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, பாகேல் அரசின் மகாதேவ் சூதாட்ட செயலி மோசடியை முன்வைத்து தீவிர பிரசாரம் செய்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் திருப்திப்படுத்தும் அரசியலை பிரதானப்படுத்தி பேசினார். பாகேல் தலைமையிலான காங்கிரசும், அதற்கு நெருக்கமானவர்களும் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மாநிலத்தின் கஜானாவை கொள்ளையடித்துள்ளனர். சட்டீஸ்கரை உருவாக்கிய பாஜ தான் அதனை மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் என்று கூறிய பிரதமர் மோடி, அதற்கான 5 உத்தரவாதங்களை வாக்குறுதியாக கொடுத்தார். இதனால் பாகேலின் ஆட்சியை கைப்பற்றி பாஜ ஆட்சி அமைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.