பெங்களூரு: தரமற்ற ஐபோனை விற்பனை செய்துவிட்டு, வாரன்டி அடிப்படையில் அதை முறையாக பழுதுபார்த்து கொடுக்காமல் வாடிக்கையாளரை கஷ்டப்படுத்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய ஆப்பிள் இந்தியா நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஆவேஷ் கான் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐபோன் 13 வாங்கியுள்ளார். ஓராண்டு வாரன்டியுடன் வாங்கப்பட்ட அந்த ஐபோனில், வாரன்டி முடிவடைதற்குள்ளாகவே பேட்டரி மற்றும் ஸ்பீக்கரில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆவேஷ் கான் இந்திரா நகரில் உள்ள ஐபிளானெட் கேர் சென்டருக்கு சென்று, தனது ஐபோனில் ஏற்பட்ட பிரச்னைகளை கூறி அதை சரிசெய்து தருமாறு கொடுத்துள்ளார். 2 வாரங்களுக்கு பிறகு, சர்வீஸ் சென்டரில் ஆவேஷ் கானை தொடர்புகொண்ட ஊழியர் ஒருவர், அவரது ஐபோனில் இருக்கும் பிரச்னை வாரன்டிக்கு உட்பட்டதில்லை என்றும் அதனால் அதை சரி செய்ய பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். தனது தரப்பில் எந்த சிக்கலும் இல்லை என்பதால் சர்வீசுக்கு பணம் செலுத்த விரும்பாத ஆவேஷ் கான், ஆப்பிள் இந்தியா நிறுவனத்துக்கு இப்பிரச்னை குறித்து மெயில் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தின் சார்பில் அவரது மெயிலுக்கு எந்தவிதமான பதிலோ விளக்கமோ அளிக்கப்படவில்லை.
அதனால் மேலும் அதிருப்தியடைந்த ஆவேஷ் கான், பெங்களூரு நகர்ப்புற மாவட்ட நுகர்வோர் விவகாரங்களை நிவர்த்தி செய்யும் கமிஷனில், தரமற்ற முறையற்ற வியாபாரம் செய்ததாக வழக்கு தொடர்ந்தார். நுகர்வோர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரிதினும் அரிதான பிரச்னை இதுவென்றும், ஆவேஷ் கானின் புகாரில் முறையான தகவல்கள் தரப்படவில்லை என்றும் ஆப்பிள் இந்தியா நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் வாதத்தை ஏற்க மறுத்த நுகர்வோர் நீதிமன்றம், இழப்பீடாக ரூ.79,999 மற்றும் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், மன உளைச்சலுக்கு நிவாரணமாக ரூ.20,000 என மொத்தம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆப்பிள் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.