டெல்லி: இந்திய பாரா பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்தை 18 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து விதிமுறைகளை மீறிய புகாரில் பாரா ஒலிம்பிக் சாம்பியன் பிரமோத் பகத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
டோக்கியோ 2020 பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற பிரமோத் பகத் 18 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF) உறுதி செய்துள்ளது. 18 மாத இடைநீக்கம் செய்யப்பட்டதால் பிரமோத் பகத் வரவிருக்கும் பாரிஸ் 2024 பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 1 அன்று, பிரமோத் பகத் 12 மாதங்களில் மூன்று முறை ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றதால், விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தின் (CAS) ஊக்கமருந்து எதிர்ப்புத் துறையால் பரிசோதிக்கப்பட்டார்.
SL3க்காக விளையாடும் பகத், CAS மேல்முறையீட்டுப் பிரிவில் இந்த முடிவை மேல்முறையீடு செய்தார். கடந்த ஜூலை 29ம் தேதி CAS மேல்முறையீட்டுப் பிரிவு மனுவை நிராகரித்து. CAS ஊக்கமருந்து எதிர்ப்புப் பிரிவின் முடிவை உறுதி செய்தது. அவரது தகுதியின்மை காலம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.