‘‘உங்க பேக்ரவுண்ட் திருப்திகரமாக இல்லாததால் எங்க பார்ட்டியில் சேர்க்க முடியாதுன்னு சொன்ன ஆக்டரின் புதுக்கட்சிக்கு பிடிசாபம் கொடுத்தாராமே இலைக்கட்சி மாஜி மூத்த நிர்வாகி..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சியின் மாஜி மூத்த நிர்வாகி ஒருத்தரு, ஆக்டரின் பார்ட்டியில் இணைவதற்கு நூல்விட்டு மூக்கு உடைஞ்சு போனாராம்.. இதனால் ஆக்டரின் பார்ட்டிக்கு பிடிசாபம் குடுத்துக்கிட்டு இருக்காராம்.. ஆக்டரின் நியூ பார்ட்டியில் இணைவதற்கு காலாவதியான மாஜிக்கள் சிலர் தூதுவிட்டுக்கிட்டு இருக்காங்களாம்.. இதில் ஒன்றிரண்டு பேரை சமீபத்தில் சேத்துக்கிட்டாங்களாம்..
இந்த வகையில் வடக்கு மண்டலத்தில் உள்ள இலை கட்சியின் மூத்த நிர்வாகி ஒருத்தரும் தூது விட்டாராம்.. ஆனால் ஆக்டரின் பார்ட்டிகளிடம் இருந்து வந்த ரிப்ளையால் அதிர்ந்து போனாராம்.. ‘உங்க பேக்ரவுண்ட் பத்தி நாங்க விசாரிச்சோம்.. எதுவும் திருப்திகரமாக இல்லை. அதுவுமில்லாம, பல கட்சிகளுக்கு போயிட்டு கடைசியாகத்தான் இலைகட்சிக்கு வந்திருக்கீங்க.. இப்ேபா பப்ளிக்கிடமும் நீங்க தொடர்பில் இல்லை. அதனால் உங்களை எங்கள் பார்ட்டியில் சேத்துக்க முடியாது..
உங்க பேமிலியில் ஆக்டிவா இருக்கிற யூத் யாராவது இருந்தா சொல்லுங்க.. அவுங்கள எங்க பார்ட்டியில் சேத்துக்கிறோம்’ என்றார்களாம்.. இதைகேட்டு செம கடுப்பான மூத்த நிர்வாகி, தனக்கு ெதரிந்தவர்களிடம் எல்லாம் இதை சொல்லி விம்முகிறாராம்.. என்னுடைய பொலிடிக்கல் அனுபவத்தில் சொல்றேன். நிச்சயமாக ஆக்டரின் பார்ட்டி தேறவே தேறாது என்று பிடிசாபம் வேறு கொடுக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கொஞ்ச நாளைக்கு கப்சிப் என அமைதியாக இருக்கும்படி நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவு போட்டிருக்கிறாராமே தேனிக்காரர் தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தேனிக்காரர் அணியில் டெல்டாவில் உள்ள நிர்வாகிகள் சமீபகாலகமாக சைலன்டாக இருந்து வருகிறார்களாம்.. குறிப்பாக, தேனிக்காரர் அணியின் முக்கிய நிர்வாகி வைத்தியானவர் கூட ரொம்பவே அமைதியாகி விட்டாராம்.. இதற்கு முக்கிய காரணம், கொஞ்ச நாட்களுக்கு நிர்வாகிகள் யாரும் பொது வெளியில் பேச வேண்டாம் என தேனிக்காரர் உத்தரவு போட்டுள்ளதுதானாம்..
குறிப்பாக, இலை, மலராத கூட்டணி குறித்தும் பேச வேண்டாம் என அன்பு கட்டளையிட்டிருக்கிறாராம்.. இதனாலேயே நிர்வாகிகள் அமைதியாக உள்ளார்களாம்.. வைத்தியானவர் பெரும்பாலும் தலைநகரிலேயே தங்கி உள்ளாராம்.. தேர்தல் களம் சூடுபிடிக்கும் முன்னரே, முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என தேனிக்காரருக்கு நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மருமகள் காலை 10 மணிவரை தூங்குகிறாள்.. மனைவி குளிப்பதில்லை என வரும் விநோதமான புகார்களால் விழிபிதுங்கி போனாராமே பெண் காக்கி அதிகாரி..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரி யூனியனில் கலவை பிராந்தியங்கள் இருக்கிறதாம்.. ஒவ்வொன்றும் தனித்தனி ரகமாம்.. அந்த வகையில் காரை பிராந்தியத்தில் உள்ள மகளிர் ஸ்டேஷனுக்கு புதுப்புது விநோதமான புகார்கள் பஞ்சாயத்துக்கு வந்ததாம்.. இதுபற்றி அங்குள்ள பெண் அதிகாரிகளே புலம்பி வருகிறார்களாம்.. சமீபத்தில் மகளிர், குழந்தைகள் பங்கேற்க உறுதிமொழி எடுப்பு கூட்டம் நடந்திருக்கு.. அதில் பேசத் தொடங்கிய அந்த பெண் அதிகாரியோ, நூதன புகார்களை பட்டியலிட்டாராம்.. மருமகள் காலை 10 மணி வரை தூங்குகிறாள் என மாமியார் எங்களிடம் வந்து புகார் கொடுக்கிறார்…
வளர்ப்பு சரியில்லாததற்கு நாங்களா போய் அவர்களை எழுப்ப முடியும் என கொந்தளித்தாராம்.. அத்தோடு மனைவி குளிப்பதில்லை என ஒரு கணவர் ஸ்டேஷனுக்கு வருகிறார். நாங்களா போய் அவரை குளிப்பாட்டுவது, இது எங்களது வேலை என விழிபிதுங்கி தனது ஆதங்கத்தை கொட்ட நிகழ்ச்சியில் ஒரே சிரிப்பலையாம்.. குடும்ப பஞ்சாயத்து என்றால் அதற்காக இப்படியா என்ற முணுமுணுப்பு இன்னும் காரையில் ஓய்ந்த பாடில்லை..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சி தலைவரை சந்தித்து புகழ்பாடி விட்டு சென்றாராமே மாஜி போலீஸ்காரரின் கூட்டாளி தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலராத கட்சியின் மாஜி போலீஸ்காரருக்கு, கட்சியில நெருக்கடி அதிகரிச்சிக்கிட்டு வருதாம்.. இவர் தலைவராக இருந்தபோது அவருக்கு அடிப்பொடிகளாக மாவட்டத்துக்கு ரெண்டு பேர் இருந்தாங்களாம்.. அவர்கள் மாஜி போலீஸ்காரருக்கு மேல், காலில் சலங்கை கட்டி ஆடினாங்களாம்.. அதோடு மலராத கட்சிக்கு கிடைத்த மாமணி என வார் ரூம் மூலமாக புகழ்ந்துகிட்டே இருப்பாங்களாம்.. ஆனால் மாஜி போலீஸ்காரரின் பல்லை புடுங்கிட்டாங்க… இதனால அவரது அடிப்பொடிகள் வாலை சுருட்டிக்கிட்டு இருக்காங்களாம்.. இதில் ஒருவர் தான், மாங்கனி மாவட்டத்து மலராத கட்சியின் பொறுப்பாளராம்..
மேரேஜ் விழா ஒன்றில் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரை பிடித்து இழுத்து எறிந்தவராம்.. அந்த சம்பவத்துக்கு இதுவரை ஒரு சாரிகூட கேட்கலையாம்.. இதனால இவர் கலந்துகொள்ளும் கூட்டத்தில், நிர்வாகிகள் யாரும் கலந்துக்க மாட்டாங்களாம்.. இந்நிலையில் தான் இலைக்கட்சி தலைவரை, அவரது வீட்டுக்கு போய் சந்திச்சிருக்காரு… இவர் தனது முக்கிய எதிரியான மாஜி போலீஸ்காரரின் கூட்டாளி என்பது, இலைக்கட்சி தலைவருக்கு நல்லாவே தெரியுமாம்.. என்றாலும் கட்சியின் பெயரைச் சொல்லிக்கிட்டு அவரை சந்திச்சாராம்.. தன்னால முடிந்த உருட்டை இலைக்கட்சி தலைவரிடம் உருட்டினாராம்..
அதிகபட்சமா அடுத்த சிஎம் நீங்கள் தான். நாங்களெல்லாம் உங்களது அடிமை என்று புகழ்பாடினாராம்.. இதனால மகிழ்ச்சியடைந்த இலைக்கட்சி தலைவர் வாய் நிறைய சிரித்தாராம்.. இலைக்கட்சி தலைவர் தனக்கு நெருக்கமானவர் என்பதை காட்டிக்கொள்ளவே அவரை சந்தித்துச் சென்றிருப்பதாக மலராத கட்சியினர் சொல்லி சிரிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்ட புதிய பேருந்தை தனது உறவினர்கள் அதிகம் இருக்கும் ஊருக்கு அனுப்பிவிட்டதாக மக்கள் குமுறுகிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தில் புதிய அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் அண்மையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டதாம்.. இவற்றில் ஒன்று கடலோர கிராமம் ஒன்றுக்கு இயக்கப்பட்டிருக்கு.. ஆனா, ரெண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு, அடுத்த நாளிலேயே அந்த வழித்தடத்தில் வழக்கமாக இயங்கி வந்த பழைய பேருந்தை அனுப்பி வைச்சிட்டாங்களாம்.. புதிய பேருந்து எங்கு சென்றது என்று விசாரித்தால் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவது உறவினர்கள் இருக்கும் ஊருக்கு திருப்பி விட்டார்களாம்..
அதிகாரிகள்தான் முதலில் எந்தெந்த வழித்தடத்திற்கு புதிய பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பட்டியல் கொடுக்கிறார்களாம்.. தொடக்க விழா நடந்த பின்னர் அதிகாரிகளே சுயமாக பேருந்துகளை வழித்தடம் மாற்றி, அவர்கள் விரும்பிய இடங்களுக்கு திருப்பி விடுகிறார்களாம்.. எதற்காக இவ்வாறு செய்கிறீர்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினால் பதில் இல்லையாம்.. போக்குவரத்து கழக அதிகாரிகளின் இதுபோன்ற செயல்பாடுகள் அரசுக்கு அவப்பெயரை தானே ஏற்படுத்தி தரும் என அவர்கள் ஆதங்கப்பட்டனராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.