Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பேக் டு பேக் சென்சுரி அடித்து சஞ்சு சாம்சன் அமர்க்களம்: டி20 போட்டியில் சாதித்த முதல் இந்திய வீரர்

டர்பன்: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக இரு முறை சென்சுரி விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். சூர்யகுமார் யாதவ் தலைமையில் தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. நேற்று முன்தினம் இரவு டர்பன் நகரில் நடந்த போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி, 8 விக். இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய தென் ஆப்ரிக்கா அணி, 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 141 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், 61 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.

சமீபத்தில் நியுசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆனதால் துவண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு, டி20 போட்டியில் பெற்ற வெற்றி குதுாகலத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் துவக்கம் முதலே அதிரடியாக ஆடி எதிரணியை கலங்கடித்தார். அவர், 10 சிக்சர், 7 பவுண்டரிகள் விளாசி, 50 பந்துகளில் 107 ரன்களை குவித்தார். அவரது நேர்த்தியான ஆட்டத்தால், 14 ஓவர்களிலேயே அணியின் ஸ்கோர் 163/2 ஆக உயர்ந்தது. சஞ்சு அமைத்து தந்த வலுவான அடித்தளத்தால் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை ஊதித் தள்ளியது.

இந்த போட்டியில் அடித்த சென்சுரி மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக இரு முறை சென்சுரி விளாசிய முதல் இந்திய வீரர் என்ற அரிய சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இதற்கு முன், வங்கதேச அணியுடன் நடந்த டி20 போட்டியிலும் சஞ்சு அபாரமாக ஆடி சென்சுரி அடித்தார். அந்த சென்சுரியால், இந்திய அணி 297/6 என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது. வங்கதேச அணியை துவம்சம் செய்யவும் அவரது சென்சுரி உதவியது.

டி20 போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக, 50க்கு மேலான ரன்களை அதிகளவில் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் சஞ்சு நிகழ்த்தி உள்ளார். முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம்எஸ் தோனி, ரிஷப் பண்ட் ஆகியோர், இதுவரை இரு முறை மட்டுமே, 50க்கு கூடுதலாக ரன் எடுத்துள்ளனர். சஞ்சு சாம்சன், 3வது முறையாக, 50க்கு மேல் ரன் எடுத்த விக்கெட் கீப்பராக உருவெடுத்துள்ளார். இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான 2வது டி20 போட்டி தென் ஆப்ரிக்காவின் கெபேரா நகரில் இன்று இந்திய நேரப்படி இரவு 7:30க்கு நடக்கிறது.

சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

‘முந்தைய போட்டிகளில் சரியாக ஆடாததால், சிரமமான மனநிலையில் இருந்தபோது, கேப்டன் சூர்யகுமார் யாதவும், தலைமை கோச் கவுதம் காம்பீரும், தொலைபேசியில் ஆறுதல் கூறினர். அவர்கள் அளித்த உற்சாகத்தால் தென் ஆப்ரிக்காவுடனான டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட முடிந்தது’ என சாதனை வீரர் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.