Friday, June 13, 2025
Home செய்திகள் குழந்தையின்மைக்கு சித்த மருத்துவமும் நல்ல தீர்வு தரும்

குழந்தையின்மைக்கு சித்த மருத்துவமும் நல்ல தீர்வு தரும்

by Porselvi

அழிந்து வரும் பாரம்பரியமான மூலிகை இனங்களை நல்ல முறையில் வளர்த்து பாதுகாப்பது அனைவரின் கடமைதானே என்கிறார் பாரம்பரிய முறை தமிழ் மருத்துவத்தை திறம்பட செய்து வரும் சித்த மருத்துவர் பிரியா. எட்டு தலைமுறைகளாக இதனை திறன் பட செய்து வருகிறார்கள். ஏறக்குறைய 250 வருடங்கள் பாரம்பரியமான சித்த வைத்தியத் துறையில் அனுபவம் வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் சித்த மருத்துவரான பிரியா. சித்த மருத்துவத்தில் முறைப்படி பட்டம் பெற்று தற்போது சேலத்திலும் சென்னையிலும் சித்த மருத்துவத்தினை திறம்பட நடத்தி வருகிறார் இளம்பெண் பிரியா. இவர் யோகா, வர்மக்கலை ஆகியவற்றோடு மூலிகை மருத்துவமும் முறையாக படித்து பட்டம் பெற்றுள்ளார். இவருர் மருத்துவசேவைகளோடு சமூக சேவையும் மிகவும் பிடித்தமான ஒன்றாக நினைத்து சேலம் மலைப் பகுதிகளில் ஆதரவற்ற முதியோர்களுக்கும், எளிய மலைவாழ் மக்களுக்கும் பல்வேறு விதமான இலவச மருத்துவ ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து வருகிறார் என்பது முக்கியமான ஒன்று. இளம் மருத்துவர் Dr. பிரியாவின் குடும்பம் எட்டுத் தலைமுறையாகவே சித்த மருத்துவத்தில் அனுபவம் மிக்கது. கடந்த இருநூற்று ஐம்பது வருடங்களாக சேலத்தில் இயங்கி வரும் இவர்களின் சித்த மருத்துவமனையில் இதுவரையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் சித்த மருத்துவ சிகிச்சையால் பயன்பெற்று வந்துள்ளனர்.முடக்குவாதம், குழந்தையின்மை, நாட்பட்ட தோல் நோய்கள், சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றிற்கு பாரம்பரிய முறையில் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார் டாக்டர் ப்ரியா. இவர்களின் பண்ணையில் மூலிகை களையும் பயிரிட்டு வளர்த்து வருகிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் இயற்கை மூலிகைகளைக் கொண்டு மருந்துகள் தயாரிக்கிறார்கள். மேலும் சேலம் ஏற்காடு கொல்லிமலைப் பகுதிகளில் கிடைக்கும் இயற்கை மூலிகைகளையும் சித்த மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தி வருகிறார்கள். சித்த மருத்துவம் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் ப்ரியா நம்மிடம் பேசியதிலிருந்து…

சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து சொல்லுங்களேன்?

சித்த மருத்துவம் என்பது நமது முன்னோர்கள் அளித்த பாரம்பரிய மருத்துவ முறைதான். நமக்கு பல விதமான நன்மைகளை சிறந்த முறையில் தரக்கூடியது. சித்த மருத்துவத்தில் இல்லாத நோய் தீர்வுகள் கிடையாது. சருமப்பிரச்சனைகள், நீரிழிவு நோய், ரூமாய்ட்டிஸ், இருமல், ஒற்றைத்தலைவலி, மாதாந்திர வயிற்றுவலி மற்றும் மாதவிலக்கு பிரச்சனைகள், குழந்தையின்மை பிரச்சினை போன்ற பல நோய்களையும் சித்த மருத்துவத்தில் நல்ல முறையில் குணப்படுத்த முடியும். இயற்கையில் கிடைக்கக்கூடிய செடி, கொடிகளுக்கு என்று பலவிதமான மருத்துவக் குணங்களும் பயன்களும் ஏராளமாக உண்டு. இதை பயன்படுத்தி சித்த மருத்துவ மருந்துகள் செய்யப்படுவதால் இது பக்கவிளைவுகள் ஏதும் அற்றது. சளி, இருமல், ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சனைகளை சித்த மருத்துவத்தின் மூலம் நல்ல முறையில்குணப்படுத்தலாம்.

சித்த மருத்துவத்திற்கு மக்களிடையே வரவேற்பு இருக்கிறதா?

நமது தொன்மை வாய்ந்த சித்த மருத்துவத்திற்கு என மக்களிடையே எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. 2020 ஆம் ஆண்டில் வந்த கொரானா நோய் காலகட்டத்திற்கு பிறகு மக்களிடையே சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு மிகவும் அதிகமாகி உள்ளது எனலாம். சித்தா மருந்துகளும் வைத்திய முறைகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்பதால் பலரும் இதனை விரும்பி மருத்துவம் செய்து கொள்கின்றனர். நாள்பட்ட வியாதிகளுக்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான மற்றும் நிரந்தரத் தீர்வுகள் உண்டு. ஒவ்வொருவரின் வயது மற்றும் அவரவர்களின் உடல்நிலைக்கேற்ற மருந்துகளை மட்டுமே தான் நாங்கள் பரிந்துரைக்கிறோம். அவர்கள் அந்த மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தி விடுகிறோம். அதனால் பலருக்கும் நல்ல பலனை கொடுக்கிறது சித்த மருத்துவம்.

இன்றைய நவீன சூழலில் குழந்தையின்மை பிரச்சனை என்பது பரவலாக இருக்கிறது சித்த மருத்துவத்தில் இதற்கான தீர்வுகள் குறித்து…

குழந்தையின்மை பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வுகள் உண்டு. எங்கள் சித்த மருத்துவ முறைகளால் பலர் மகப்பேறு பாக்கியம் பெற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருமணமாகி இயல்பாக வாழும் தம்பதியர்கள் குறிப்பிட்ட கால இடைவெளி வரை கருவுறாமல் இருந்தால் அது குழந்தை இன்மை ப்ரச்சனையின் மிகப்பெரிய அறிகுறியாகும். இத்தகைய பிரச்னைகளைக் கொண்டவராக திருமணமான ஆண்களும் பெண்களும் இருந்தால் அவர்கள் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுக வேண்டும். பொதுவாக மகிழ்ச்சியான உறவில் இருக்கும் ஒரு தம்பதியர் இரண்டு ஆண்டுகள் வரை இயற்கை முறையில் குழந்தை பெற காத்திருக்கலாம். அதன் பிறகு கணவன் மற்றும் மனைவி இருவருமே சிகிச்சைக்கு வருவது நல்லது. அவர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் குறித்து தேவையானவற்றை பரிந்துரைப்போம். முறையற்ற மாதவிலக்கு, கருமுட்டை உருவாக்கம் மற்றும் விந்தணுக்கள் குறைபாடு போன்றவற்றிற்கு சிகிச்சைகள் அளிப்போம். என்னிடம் சிகிச்சை பெற்ற பலரும் குழந்தையுடன் வரும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். குறைந்தபட்சம் 35 வயதிற்குள் சிகிச்சை முறைகளை செய்து கொள்வது நல்லது. முறையான சிகிச்சைகளோடு, மூலிகை மருத்துவத்துடன், நல்லதொரு சத்தான ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தினை மேற்கொண்டால் நல்ல பலனை பெறலாம். சரிவிகித உணவு முறை சிறந்த பலனை தரும். சரிவிகித உணவு முறை கருவுறுதல் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஹார்மோன் சமநிலை, இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலத்தை பாதுகாக்கின்றன. சரிவிகித உணவில் புரதங்கள், நல்ல கொழுப்புகள், மற்றும் மெதுவாக செரிக்கும் கார்போஹைட்ரேட்டுகள் இனப்பெருக்க ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவுகிறது. நம்பிக்கையுடன் முயன்றால் குழந்தையின்மை பிரச்னைகளுக்கு சித்த மருத்துவமும் நல்ல தீர்வுகளை தரும்.

நீரிழிவு நோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்து…

இந்தியாவில் தற்போது அதிகம் பேர் நீரிழிவு நோய்களாலும் அதன் துணை நோய்களாலும் பாதிப்புகள் அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு சித்த மருத்துவமுறையில் சிறப்பான மருத்துவத்தை செய்து வருகிறோம். சித்தா மருந்துகள் மூலம் பல நீரிழிவு நோயாளிகளின் நோயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். தற்போது நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது உண்மைதான். சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோயை இருபது வகைகளாக பிரித்து மருத்துவம் செய்கிறோம். அனைத்து வகையான நீரிழிவு நோய்களுக்கும் பாரம்பரிய முறைப்படி சித்த மருத்துவத்தில் மருந்துகள் உண்டு. நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லையெனில் பல்வேறு துணை நோய்களை உருவாக்கும். மேலும் கிட்னி சம்பந்தப்பட்ட நோய்களும் வரும். இதற்கெல்லாம் எங்களது சித்த மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள் நிறைய இருக்கிறது.

முடக்குவாத நோய்க்கு ஏதேனும் சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளதா?

தமிழ் சித்த மருத்துவத்தில் எண்பது வகையான வாதநோய்கள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த முடக்குவாதம் அல்லது சரவாங்கி என்கிற வாதநோய். முடக்குவாதம் ஏற்பட்டால் உடலில் உள்ள எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படும். இதற்கு எங்கள் ஆதி அகத்தியர் சித்த மருத்துவ பாரம்பரிய முறையில் நல்ல சிகிச்சை முறை இருக்கிறது. இதற்கென முறையான சிகிச்சை முறையினை தொடர்ந்து மேற்கொண்டவர்கள் நற் பலனை பெற முடியும். நாட்பட்ட சரும நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு.

மருந்துகளுக்கான மூலிகைகள் எங்கு கிடைக்கிறது?

மலைப்பகுதிகளில் அதாவது ஏற்காடு மலை, கஞ்சமலை, கொல்லிமலை, கல்வராயன்மலை ஆகிய பகுதிகளில் உள்ள மூலிகைகளை எடுத்து வந்து மருந்துகள் தயாரிக்கிறோம். இதை தவிர சொந்தமாக மூலிகைப் பண்ணை அமைத்து அதில் கிடைத்தற்கரிய மூலிகைகளையும் வளர்த்து வருகிறோம். அந்த மூலிகையை பதப்படுத்தி மருந்துகளை நாங்களே தயாரித்து வருகிறோம். சிறந்த மருந்துவ பணிகளுக்காக பல்வேறு விருதுகளையும் பாராட்டுதல்களையும் கௌரவங் களையும் பெற்றுள்ளார் சித்த மருத்துவர்
Dr. பிரியா.
– தனுஜா ஜெயராமன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi