பெரம்பூர்: புளியந்தோப்பு காவல் நிலையத்தில் நேற்று மாலை கர்ப்பிணியாக இருந்த பெண் காவலருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அப்பெண்ணுக்கு 9 வகை உணவுகள் வழங்கி பெண் போலீசார் அசத்தினர். சென்னை நகர காவல் நிலையத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களைப் பிடிப்பது, பொதுமக்களுக்கு பாதுகாப்பு தருவது என்ற எல்லைக்கோட்டில் நின்றுவிடாமல், பல்வேறு மனிதநேய மற்றும் சமூகசேவை பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது, பாய்ஸ் கிளப் மூலம் ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பித்தல் உள்பட பல்வேறு சமூகசேவை பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் எப்போதும் காவல் நிலையத்திலேயே இருக்கும் காவலர்களின் வீடுகளில் நடைபெறும் பல்வேறு சுப-துக்க நிகழ்ச்சிகளில் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். சில நேரங்களில் அந்தந்த காவல் நிலையங்களிலேயே அங்கு பணிபுரியும் கர்ப்பிணி பெண் காவலர்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி, அப்பெண்ணுக்கு 9 வகை உணவுகள் வழங்கியும் போலீசார் அசத்தி வருகின்றனர். இந்நிலையில், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ராஜாத்தி (29) என்ற பெண் காவலர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி அசோக் என்ற கணவரும் 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக வேலை பார்த்த ராஜாத்தி என்ற பெண் காவலருக்கு, நேற்று மாலை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சரோஜினி மற்றும் சக பெண் காவலர்கள் பங்கேற்று, கர்ப்பிணியான ராஜாத்தி என்ற பெண் காவலருக்கு மாலை அணிவித்து, விதவிதமான கண்ணாடி வளையல்கள் அணிவித்து, நலங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் கர்ப்பிணியான ராஜாத்தி என்ற பெண் காவலருக்கு 9 வகை உணவுகளை சக பெண் காவலர்கள் பரிமாறினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புளியந்தோப்பு சரக உதவி ஆணையர் அழகேசன் பங்கேற்று, கர்ப்பிணி பெண் காவலர் ராஜாத்தி மற்றும் அவரது கணவர் அசோக் ஆகிய இருவரும் மலர் தூவி வாழ்த்தினார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சரோஜினி கூறுகையில், குடும்பத்தில் இருக்கும் நேரத்தை தவிர்த்து, பிற நேரங்களில் காவல் நிலையத்திலேயே பெண் காவலர்கள் நேரத்தை செலவிடுகின்றனர். அவர்களது மன இறுக்கத்தை போக்கி சந்தோஷப்படுத்த, இந்த வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.