பூந்தமல்லி: சென்னை மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறை சார்பில், நேற்று போரூரில் மதுரவாயல் தொகுதியை சேர்ந்த 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி தலைமையில் நடந்தது. வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் நொளம்பூர் ராஜன், மருத்துவ அலுவலர் கற்பகம், மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சீர்வரிசை பொருட்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கி வாழ்த்தினார். பின்னர் அவர் பேசுகையில், கர்ப்பிணி பெண்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் பிறக்கும் குழந்தை சிறப்பாக இருக்கும்.
பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, கர்ப்பிணி பெண்களுக்கு திமுக அரசின் தாய்வீட்டு சீதனம். இங்கு பங்கேற்றுள்ள கர்ப்பிணி பெண்கள், தங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு தமிழ் பெயர் வைத்தால், அவர்களுக்கு நானும் கணபதி எம்எல்ஏவும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்குவோம் என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து கர்ப்பிணி பெண்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி கேட்டார். அதற்கு சரியான பதில் கூறிய கர்ப்பிணி பெண்களுக்கு அமைச்சர் ₹2 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினார்.