சமீபத்தில் இருபது வருடம் அனுபவம் கொண்ட ஆசிரிய நண்பரை சந்தித்தேன். அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது குழந்தைகளின் சேட்டைகள் குறித்து பேச்சு எழுந்தது. முந்தைய காலக்கட்டத்தை விட தற்போது உள்ள குழந்தைகள் பல மடங்கு அறிவு பெற்றவர்களாகவும், தொழில்நுட்பங்கள் அறிந்தவர்களாகவும் உள்ளார்கள். குழந்தைகளிடம் கணினி குறித்த அறிவு அதிகமாக உள்ளது. அவர்களின் விளையாட்டுகள் எதார்த்தமாக இல்லாமல் கற்பனைகள் நிறைந்ததாகவும், அச்சுறுத்துவதாகவும் உள்ளன. எப்போதும் பிறரைத் துன்புறுத்தி மகிழ்வதாக உள்ளன. ஆனால், குழந்தைகளைத் தண்டிப்பதோ, கண்டிப்பதோ இயலவில்லை. அந்த காலத்தில் ஒரு அதட்டு போட்டாலே அடங்கி விடுவார்கள். பிறரைத் துன்புறுத்தி மகிழ்ச்சி கொள்பவனும் பிரம்புக்கு பயந்து அடங்கி ஒடுங்கி இருந்தான். அடியாத மாடு பணியாது என்பார்கள். இப்ப எங்க அடிக்க முடிகின்றது என ஆதங்கப்பட்டுக் கொண்டார். குழந்தைகளைத் தண்டிக்கவோ, கண்டிக்கவோ கூடாது. மனதளவில் துன்பப்படும்படி கூட பேசுவது குற்றமாகும் என தற்போதைய கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் கூறுகின்றது. கல்வியில் தண்டனை என்பது தேவையில்லாத ஒன்று என்றே கருதுகின்றேன். வள்ளென்று விழுவது கூட குழந்தைகளின் மனதைப் புண்படுத்தும் என்பது உண்மை. கோபப்பட்டு பேசுவது குழந்தைகளின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்புறம் குழந்தைகளுக்கு எப்படித்தான் பாடம் கற்றுத் தருவது?!
இது ஆசிரியருக்கு மட்டும் அல்ல… பெற்றோர்களுக்கும் ஒரு சிக்கலே! முந்தைய காலத்தில் பிள்ளைகள் தவறு செய்தால், ஆசிரியரிடம் கூறி தோலை உரித்து விடுவதாக பயமுறுத்துவார்கள். ஆனால், இன்று அப்படி கூறுவது சாத்தியமில்லாத ஒன்று. குழந்தைகளைக் கையாள்வது என்பது பெரும் சிக்கலாகவே உள்ளது. அடிக்காமல் திருத்துவது இயலாது என்பது பொதுக் கருத்தாகவே இருக்கின்றது! ஆனால் இது தவறு. உடல்ரீதியான தண்டனை எதிர்மறை விளைவையே தரும். அது லேசான பிரம்படியாக இருந்தாலும், இதனால் எந்த நன்மையும் குழந்தையிடம் ஏற்படப்போவதில்லை. ஏனெனில், அது குழந்தைகளின் மனதில் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும். அதிகாரத்தை நிலை நிறுத்த பிறர் மேல் எந்த வித உடல்ரீதியான தாக்குதலைச் செய்வதும் சரி என்ற முடிவிற்கு குழந்தைகள் செல்லக்கூடும்.
ஒரு குடும்பத்தில் தாயோ அல்லது தந்தையோ, தம் குழந்தை செய்யும் சிறிய தவறுக்குக் கூட அடித்து, தண்டித்து வளர்க்கின்றார் என வைத்துக் கொள்வோம். அந்த வீட்டில் அவர் இருக்கும்போது மயான அமைதி நிலவும். அதே வேளையில் அவர் சென்றதும், அக்குழந்தை தன்னுடன் பிறந்த பிற குழந்தையுடன் விளையாடும்போது கட்டாயம் சண்டையிட்டு துன்புறுத்தியே விளையாடும். இந்த பழக்கம் வெளியிலும் தொடரும். குழந்தைகளிடம் இருக்கும் சேட்டைகள், தவறுகளை நீக்க பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைகளிடம் நற்பண்புகளை உருவாக்க வேண்டும். இது எப்படி சாத்தியம்? குழந்தைகளை அவர்களின் இயல்பான போக்கில் விட்டுவிட வேண்டும் என்று கல்வியாளர் ரூசோ கூறுகின்றார்.
ஆம்! குழந்தைகள் முரட்டுத்தனமாக விளையாடுவதால் ஏற்படும் , சிறு சிறு காயங்கள் குறித்து அச்சம் கொள்ளத் தேவை இல்லை. ரூசோ சொல்வது போல் அதன் இயல்பிலேயே அனுமதியுங்கள். சிறு காயங்கள் அவர்களுக்கு தகுந்த அனுபவத்தை ஏற்படுத்தும். அந்த அனுபவங்கள் குழந்தைகளுக்குத் தன் தவறினால் ஏற்பட்ட விளைவுக்கான புரிதலை உண்டாக்கும். அதேபோல் குழந்தைகளிடத்தில் அதிகாரத்தைச் செலுத்துவதை நாம் அவர்களுக்கு உணவு தருவதில் இருந்தே ஆரம்பித்துவிடுகிறோம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துகிறோம் என்று நினைத்து, நம் விருப்பத்திற்கு ஏற்ற உணவைத் திணிக்கின்றோம். காலையில் பள்ளிக்குச் செல்லும் முன் உணவை சாப்பிட வைக்க பெரும் போராட்டம் எல்லா வீடுகளிலும் நடைபெறுவது உண்மையே! அதேபோல் உறங்க வைப்பதிலும் குழந்தைகளிடம் சண்டை போடுகின்றோம். நம்முடைய முரட்டுத்தனத்தை அதிகாரத்தை செலுத்த ஆரம்பிக்கின்றோம். அதேபோல் ஒப்பிட்டுப் பாராட்டுதல் கூடாது.
அது மோசமான விளைவை ஏற்படுத்தும். “தம்பி ஃபஸ்ட்டா வந்திருக்க வாழ்த்துகள். இருந்தாலும் பாரு, நம்ம எதிர்வீட்டு பாக்கியத்தின் மகன் படிப்பில் மட்டும் ஃபஸ்ட்டா இல்லாமல், செஸ் , கேரம்னு விளையாட்டிலும் ஃபஸ்ட்டா இருக்கான். நீ படிச்சு மார்க் எடுத்தா மட்டும் போதாது. அவனைப்போல் நீயும் வேறு ஒண்ணிலும் சாதிக்க முயற்சி செய். இது போதாதுடா..இன்னும் சாதிக்கணும்.’’ என்பது போன்ற பாராட்டு எதிர்மறை விளைவையே தரும். “சூப்பர்டா தம்பி! கீப் இட் அப்!” , “பிரமாதம்டா.. கலக்கிட்ட.” ,“தம்பி நீ நினைச்சதை சாதிச்சிட்ட , வெரி குட்” “வாழ்த்துகள் தம்பி. சந்தோஷமா இருக்குடா..” என்பது போன்று கூறுங்கள். உங்களுடைய பாராட்டுகள் வாழ்த்துகள் இயற்கையாக அமைய வேண்டும். செயற்கையானதாகவோ, சூழ்நிலைக்கு மாறுப்பட்டோ அமைந்து விடக்கூடாது. அதே சமயத்தில் உங்களின் பாராட்டு அந்த சூழலில் இயற்கையாக அமைவதாக இருந்தால், அது அவனை நெறிப்படுத்த உதவும். உதாரணமாக, உடன் படிக்கும் நண்பனுக்கு தன் நோட்டை கொடுத்து உதவும்போது, “சபாஷ்டா.. இது போலத்தான் கொடுத்து உதவ வேண்டும்.” என்று கூறுங்கள். அவனது சகோதரன் படிக்க உதவி செய்யும்போது, “நீ ரொம்ப பாசக்காரண்டா.. இப்படி தான் கற்றுத் தரணும் “ என்று பாராட்டினால் , அவன் மனதில் அன்பும், நற்குணங்களும் தானாக வளர ஆரம்பிக்கும்.
இதையெல்லாம் விட்டுவிட்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாத ஒரு சிறு குழந்தைக்கு உடல்ரீதியான தண்டனை தரவேண்டும் என்று நினைப்பது ஆச்சரியமே! 21ம் நூற்றாண்டில் இருக்கும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் அன்போடு பாசத்துடன் குழந்தைகளை அரவணைத்து பாராட்டி, அவர்கள் போக்கில் செயல்பட அனுமதித்தால் போதும். குழந்தைகள் நற்பண்புகள் நிரம்பப் பெற்று, தம் தவறுகளை திருத்தி, அறிவுப்பூர்வமாக மனித உறவுகளை மதித்து வாழத் தொடங்கி விடுவார்கள்.
– க.சரவணன்,
சிறார் எழுத்தாளர்