மனமகிழ்வுடன் ஒற்றுமையாக வாழும் தம்பதியர்கள் குறிப்பிட்ட கால இடைவெளி வரை கருவுறாமல் இருந்தால் அது குழந்தையின்மை பிரச்னையின் அறிகுறி. இத்தகைய பிரச்னைகளைக் கொண்டவராக திருமணமான ஆண்களும் பெண்களும் இருந்தால் அவர்கள் உடனடியாகத் தகுந்த மருத்துவரை அணுக வேண்டும். இன்றைய சூழலில் மாறி வரும் வாழ்வியல் முறைகள், உணவு பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் போன்றவையால் நிறைய தம்பதியினருக்கு குழந்தையின்மை பிரச்னைகள் ஏற்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் இதற்கென நவீன மருத்துவ முறைகள் அதிகம் வந்துவிட்டது. அதன் மூலம் குழந்தைப் பேறின்மை பிரச்னைகளை எளிதில் தீர்க்கலாம் என்கிறார் மகப்பேறு மருத்துவர் டாக்டர் உமா ரமேஷ். இதுவரை நிறைய தம்பதிகளுக்கு குழந்தைப் பேறின்மை பிரச்னைகளை தீர்த்துவைத்து குழந்தை பாக்கியத்தை பெற்றுத் தந்துள்ளார் டாக்டர் உமா ரமேஷ். நவீன உலகினில் தற்போது நிலவி வரும் குழந்தையின்மை பிரச்சினைகள் குறித்தும் அதன் சிகிச்சை முறைகள் குறித்தும் பகிர்ந்து கொள்கிறார்…
குழந்தையின்மைக்கான பொதுவான காரணிகள் என்னென்ன?
பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, கருக்குழாய் அடைப்பு, என்டோமெட்ரியாசிஸ் சாக்லெட் சிஸ்ட், கருமுட்டை அளவு மற்றும் தரம் குறைவது (Low AMH), கர்ப்பப்பைக்கட்டி போன்றவை குழந்தையின்மைக்கான காரணங்களாக உள்ளன. ஆண்களுக்கு விந்தணு தரம், எண்ணிக்கை குறைவு, விந்தணு இயக்கம், ஹார்மோன் பிரச்னைகளாலும் இருவருக்கும் பொதுவாக தெரியாத காரணிகள், வாழ்க்கை முறை (புகை, மது, உடல்பருமன்), மரபணுக் கோளாறுகள் உள்ளிட்டவை குழந்தையின்மைக்கான பொதுவான காரணிகளாக உள்ளன.
பிசிஓடி பிரச்னை எதனால் ஏற்படுகிறது?
நமது வாழ்க்கைமுறை மாற்றம், துரித மற்றும் ஜங்க் உணவுகள், அதீத மன அழுத்தம், பரம்பரைத் தன்மை போன்ற நான்கும்தான் பிசிஓடிக்கான முக்கியமான காரணங்கள். பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் என்கிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னை இன்று மிக அதிகமாகிக் கொண்டிருக்கிறது நமது வாழ்க்கைமுறை மாற்றம். பிசிஓடி பிரச்னை குழந்தையின்மைக்கும் முக்கிய காரணமாக உள்ளது. சரிவிகித உணவு முறை மற்றும் முறையான உடற்பயிற்சிகள் மூலம் இந்த பிரச்னைகளை குறைக்கலாம் அல்லது வராமல் தற்காத்துக் கொள்ளலாம்.
குழந்தைப் பேறின்மைக்கான சிகிச்சை முறை குறித்து சொல்லுங்கள்?
தற்போது குழந்தைப் பேறின்மைக்காக ஐயுஐ (IUI), ஐவிஎப் முறை (IVF), ஐசிஎஸ்ஐ ( ICSI) , போன்ற செயற்கைக் கருவூட்டல் முறை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். முதல் கட்டமான ஐயுஐ கர்ப்பப்பையில் செயற்கையான கருவூட்டலை செய்யும் முறை. இது மிக எளிதான சிகிச்சை முறை தான். இரண்டாவது கட்டமான ஐவிஎப் சிகிச்சை முறை என்பது கர்ப்பப் பைக்கு வெளியே சோதனை முறை கருவூட்டலை குறிக்கும். இம்முறையில் உருவாக்கப்படும் செயற்கைக் கருவூட்டலை பெண்ணின் கர்ப்பப்பையில் செலுத்தி கருவை வளர்ச்சியடையச் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை. கருமுட்டை குறைபாடுடைய பெண்களுக்கும், விந்தணு குறைபாடுடைய ஆண்களுக்கும் இந்த வகையிலான சிகிச்சை முறை சிறந்த பலனைத் தரக்கூடியது.
ஐசிஎஸ்ஐ சிகிச்சையும் பெண்ணின் சூலகத்திலிருந்து கருமுட்டையை பிரித்து வெளியே செயற்கைக் கருவூட்டலை நிகழ்த்தி பெண்ணின் கருப்பையில் வைத்து வளர்ப்பதுதான்.மகப்பேறு சிகிச்சையை பொறுத்தவரை இன்னும் நிறைய நவீன வசதிகள் தற்போது இருக்கின்றன. தம்பதிகள் விரும்பினால் தங்கள் கருமுட்டை மற்றும் விந்தணு ஆகியவற்றை எங்கள் மருத்துவ மையத்தில் சேமித்து வைக்கலாம். விரும்பிய காலத்தில் வேண்டிய பொழுது இரண்டாவது குழந்தையைக் கூட பெற்று கொள்ளலாம். கருமுட்டை உற்பத்தி குறைவாக உள்ளவர்கள் ஓவரியேஷன் ரீசுவனேஷன் முறையில் கருமுட்டை உற்பத்தியை அதிகரிக்கும் சிகிச்சை முறையைச் செய்துகொள்ளலாம். அரசின் சட்டதிட்டத்திற்கு உட்பட்ட கருமுட்டை தானம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இது தவிர ஏஐ என்கிற ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சிகிச்சைகளும் செய்கிறோம்.
மாதவிடாய் கால விடுமுறை பல நாடுகளில் மற்றும் நம் இந்தியாவிலேயே சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இந்த விடுமுறை எந்த அளவிற்கு அவசியம்?
எல்லா பெண்களுக்கும் மாதவிடாய் என்பது வலி மிகுந்தது என்று சொல்லிவிட முடியாது. அதே சமயம் ஒரு சில பெண்களுக்கு இது பெரிய பிரச்னைகள் கொடுக்கக் கூடியது தான். அடினோமயோசிஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் (Adenomyosis, endometriosis) என்கிற திசுக்களில் ஏற்படும் கோளாறினால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மிகுந்த வலி நிறைந்ததாக இருக்கும். இதன் காரணமாக பீரியட் காலத்தில் ஒவ்வொரு மாதமும் வலிகளும் அதிகமாகும். அப்படியான பெண்களுக்கு விடுமுறையும், கட்டாய ஓய்வும் அவசியம். அவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ்களை வைத்து ஓய்வு அளிப்பது நல்ல விஷயமாக இருக்கும். அந்தப் பெண்களுக்கு விடுமுறை அளிக்கலாம் என்கிற நடைமுறைச் சட்டம் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். என் மருத்துவப் பணியில் நிறைய பெண்கள் இது மாதிரியான துன்பங்களை அனுபவிப்பதை பார்த்திருக்கிறேன். இத்தகைய பெண்களுக்கு மருத்துவச் சான்றிதழ்களை சரிபார்த்து விட்டு விடுமுறை வழங்கும் திட்டத்தை பரிசீலிக்கலாம். மேலும் மெனோபாஸ் விடுமுறையும்கூட யோசிக்கலாம். குழந்தை பிறப்பினை தேவையற்று தள்ளிப்போடுவதை தவிர்க்கவும். தினமும் உடற்பயிற்சி நடைப்பயிற்சி மேற்கொண்டு உடலைக் கட்டுக்குள் வைப்பது அவசியம். நமது கால நிலைக்கேற்ப உடைகளைத் தேர்வுசெய்து அணிவது, சீரான உணவுப்பழக்கத்தினை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 35 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதும் நல்லது. அதிகாலை எழுவதும், இரவு சீக்கிரமாக தூங்கச் செல்வதும் அவசியம். மொத்தத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்வு பல வகையிலும் நன்மை பயக்கும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் டாக்டர் உமா ரமேஷ்.
– தனுஜா ஜெயராமன்.