குழந்தையின் வளர்ச்சி என்பது உடல் வளர்ச்சியுடன் மட்டுமல்ல, மனநல வளர்ச்சியுடனும் இணைந்திருக்க வேண்டும். மனநலம் நல்ல நிலையில் இருந்தால்தான் குழந்தை சுயநம்பிக்கை, சமூகத் தொடர்பு மற்றும் எதிர்கால வாழ்க்கை திறன்களில் சிறந்து விளங்க முடியும். இதற்கு பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக அன்னையின் மனநலமும், குழந்தையின் மனநலமும் ஒருசேர இதில் செயல்பட்டால்தான் குழந்தை ஆரோக்கியமான வளர்ச்சியை அடையும்.
காரணங்கள்
அன்பும் பாதுகாப்பும் குறைவு
பெற்றோர் பாசம் செலுத்தாமை, அல்லது பாதுகாப்பற்ற சூழல் குழந்தையின் மனதில் பயம் மற்றும் நம்பிக்கையின்மையை உருவாக்குகிறது.அதிக எதிர்பார்ப்புகள் மற்றும் அழுத்தம்குழந்தைகளின் இயற்கையான வளர்ச்சி வேகத்தை மீறி பெற்றோர் அதிகமான எதிர்பார்ப்புகளைக் கட்டாயமாக்கினால், மன அழுத்தம் ஏற்படுகிறது. வயதுக்கு மீறிய செயல்களை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துதல், அவர்களின் உடல் வலிமையைத் தாண்டிய பயிற்சிகள் என இவையாவும் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும்.
தவறான ஒழுக்க முறைகள்
அடிக்கடி கடுமையான தண்டனைகள், விமர்சனங்கள், கேலி போன்ற முறைகள் குழந்தையின் மனநிலையை பாதிக்கும். குறிப்பாக மற்றொரு குழந்தையுடன் ஒப்பீடு கூடவே கூடாது.
தொடர்ச்சியான ஸ்கிரீன் நேரம்
டிவி, மொபைல் போன்ற ஸ்கிரீன் மீதான அடிமை, குழந்தையின் மனஉறுதி மற்றும் சமூகத் திறன்களை குறைக்கும். சொற்ப விஷயங்களில் மனம் லயித்துவிடும் ஆபத்து. எதிலும் நாட்டமில்லாமல் தனிமைப்படுத்திக்கொண்டு ஸ்கிரீனுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும் மனநிலை உருவாகும்.
ஆரோக்கியமற்ற குடும்ப சூழல்
பெற்றோருக்குள் அடிக்கடி ஏற்பட்ட பிரச்சினைகள், மோதல்கள் குழந்தையின் நெருக்கடியையும் பாதுகாப்பற்ற உணர்வையும் உருவாக்குகிறது.
பாதிப்புகள்
தன்னம்பிக்கையின்மை
சிறுவயதிலேயே தன்னை மதிக்காத மனநிலை உருவாகும். இதனால் சுற்றி இருப்போர் மீதும் மதிப்பு குறைந்துவிடும்.
சமூகத் தொடர்பில் பின்தங்கல்
நண்பர்களுடன் அல்லது பிறருடன் உரையாடுவதில் தயக்கம் மற்றும் தவிர்ப்பு தோன்றும். சுறுசுறுப்புக் குறையும்.வகுப்பில் கவனமும் குறையும்.
மன அழுத்தம் மற்றும் கடும் உணர்ச்சி மாற்றங்கள்
கோபம், சோகம், பயம் போன்ற உணர்வுகளில் கட்டுப்பாடு குறையும். எந்த உணர்வை எங்கே , எப்படி வெளிப் படுத்த வேண்டும் என்பதில் குழப்பம் உண்டாகும்.
படிப்பிலும் ஆற்றலிலும் குறைவு
பள்ளிப்படிப்பில் ஆர்வம் குறையும் மற்றும் திறமைகளில் பின்னடைவு ஏற்படும். சக நண்பர்களுடன் ஒன்றிணைந்து பேசுவது முதல் அனைத்திலும் பின் தங்கிவிடுவர்.
முன்கூட்டிய மனநோய்கள் (Depression, Anxiety)
மனநிலையிலும் பாதிப்புகள், அதனால் கத்துவது, கோபமடைவது, யாரையும் ஏற்றுக்கொள்ளாத நிலை
உண்டாகும்.
தீர்வுகள்
பாசமான மற்றும் பாதுகாப்பான சூழல் உருவாக்குதல்
குழந்தைக்கு எப்போதும் “நீ பாதுகாப்பாக இருக்கிறாய்” என்ற உணர்வைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
உணர்வுகளை மதிப்பது
குழந்தை வருத்தப்பட்டால், அதனை புரிந்து கொண்டு பேச வேண்டும். உதாரணமாக,“நீ வருத்தமாக இருப்பது புரிகிறது; நம்மால் அதை சரி செய்ய முடியும்” என்று ஆதரவு அளிக்க வேண்டும்.
பிரச்சினைகளை நேர்மையாக பகிர்வது
வாழ்க்கையில் தோல்விகள் இயல்பானவை என்பதை குழந்தைக்கு மெதுவாக உணர்த்த வேண்டும். உங்கள் வெற்றிக் கதைகளுடன் தோல்விக் கதைகளையும் சொல்லி வளர்க்கலாம். குறிப்பாக வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் எதற்கு, இதற்கு முன்பான மாற்று என்ன இப்படியான பல கலந்துரையாடல்கள் கொடுக்கலாம்.
நேர்த்தியான ஒழுக்க முறைகள் கடைப்பிடித்தல்
தண்டனை அளிக்கும் போது, அதற்கான விளக்கத்துடன், உரிய மரியாதையைப் பேண வேண்டும். எடுத்த எடுப்பில் அடித்தால் குழந்தைக்குப் புரியாது. மீண்டும் அந்தத் தவறை செய்ய வாய்ப்புகள் அதிகமாகும்.
மிதமான எதிர்பார்ப்புகளை நிர்ணயித்தல்
குழந்தையின் திறமைகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி வேகத்திற்கு ஏற்ப, நிதானமான இலக்குகளை அமைக்க வேண்டும். மூன்று வயது குழந்தையிடம் முன்னூறு திருக்குறள் படிக்கச் சொல்வது நிச்சயம் மன அழுத்தத்தை உண்டாக்கும்.
ஸ்கிரீன் நேரத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நேரடி செயல்களில் ஈடுபடுத்துதல்
விளையாட்டு, கலை, வாசிப்பு போன்ற நேரடி செயல்களில் குழந்தையை ஈடுபடுத்தி, அவர்களின் உணர்ச்சி வளத்தை வளர்க்கலாம். சமூக வலைதள பயன்பாட்டில் அவர்களையும் ஈடுபடுத்தி குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.
நீங்கள்தான் அவர்களின் கண்ணாடி
குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள்தான் கண்ணாடி. குறிப்பாக குழந்தைகளுடன் அதிகம் நேரம் செலவிடும் அன்னையர்தான் அவர்களின் ரோல் மாடல் எனவே நீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல, கெட்ட விஷயங்கள் அனைத்தும் குழந்தைக்கு மனதில் பதியும் என்பதால் அவர்கள் முன் நல்ல பழக்கங்கள் கடைப்பிடிப்பது அவசியம்.
குடும்பமாக நேரம்
வாரத்தில் இரண்டு முறையாவது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு, குழந்தைகள் பேசுவதையும், அவர்கள் செயல்பாடுகளையும் ரசித்து, கவனித்து அவர்களுக்கான நேரம் ஒதுக்குவது மிக அவசியம்.
– எஸ். விஜயலட்சுமி