திருமயம்: திருமயம் அருகே திருமணமாகாத கல்லூரி மாணவி தனக்கு தானே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தையை வீட்டு அருகே புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே வெளிநாட்டில் பணியாற்றி வருபவரது மகள் உஷா (20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் இலுப்பூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் தங்கி நர்சிங் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். அவர் ஒருவரை காதலித்துள்ளார். திருமணம் ஆகாதநிலையில், உஷா கர்ப்பமானார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த உஷா, நேற்று வீட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து திருமணமாகாத நிலையில் குழந்தை பெற்றது தெரிந்தால் உறவினர்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் என நினைத்து தான் பெற்ற குழந்தையை யாருக்கும் தெரியாமல் வீட்டு வாசலிலேயே அவசர அவசரமாக குழி தோண்டி புதைத்து விட்டு சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற பாக்கியம் என்ற பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டு சுற்றிப்பார்த்தார். அப்போது, உஷா வீட்டு வாசலில் மண்ணுக்குள் குழந்தையின் கை மட்டும் வெளியே தெரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக புதைக்கப்பட்ட குழந்தையை பாக்கியம் தோண்டி எடுத்த போது உயிருடன் இருந்துள்ளது. பனையப்பட்டி அரசு சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சைக்குபின், மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த பனையப்பட்டி போலீசார், உஷாவிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரது காதலனையும் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.