குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது அதன் அழுகையை சமாளிப்பதுதான். இன்று பல பெற்றோர்கள் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு பதிலாக அவர்கள் மன அழுத்த நிலைக்குச் சென்று விடுகிறார்கள். குழந்தை ஏன் அழுகிறது? எதனால் அழுகிறது என்பதை கண்டு பிடிக்க மிகவும் கடினம் என்றாலும் குழந்தையின் செய்கைகளிலிருந்து கண்டு பிடிக்கலாம். சும்மா இருக்கும் குழந்தை திடீரென்று அழுதால் அதனை எறும்பு போன்ற பூச்சிகள் கடித்திருக்கலாம், தரையில் தலை கவிழ்ந்து இடித்துக் கொண்டிருக்கலாம். இத்தருணத்தில் குழந்தை உடனே தூக்கி சமாதானப்படுத்த முயற்சிக்கலாம்.குழந்தை கையிலிருக்கும் கார் போன்ற பொம்மைகள் கட்டிலுக்கடியில் போய் விட்டால் அதை எடுக்க தெரியாமல் அழும். உடனே அந்த பொம்மையை குழந்தை கையில் கொடுத்து அழுகையை நிறுத்தலாம்.டிவியில் கார்ட்டுன் பார்க்கும் குழந்தை… வேறு நிகழ்ச்சி மாறிவிட்டால் அழத்தொடங்கும். டிவியை சரி செய்து குழந்தை அழாமல் தடுக்கலாம்.
வீட்டுக்கு வரும் விருந்தினர் அல்லது உறவினர் வந்து குழந்தையை தூக்கினால் சில குழந்தைகள் அமைதியாக இருக்கும். சில குழந்தைகள் உடனே அழத் தொடங்கும். அந்தக் குழந்தையை அவர்களிட மிருந்து திரும்பி வாங்கி தூக்கிக் கொண்டு சமாதானப்படுத்தலாம்.தூக்கத்தில் கூட சில குழந்தைகள் அலறி எழுந்து அழும். அந்தக் குழந்தையை முதுகில் தட்டி ‘அழாதே கண்ணே என்று அமைதிப்படுத்த வேண்டும். அது அழுகையை நிறுத்தும் வரை அன்போடு அரவணைத்து சமாதானப்படுத்த வேண்டும்.அழும் குழந்தையை எக்காரணத்திற்காகவும் கோபம் கொண்டு அடிக்கக் கூடாது. ஏதோ ஒரு வித அச்சத்தில் குழந்தை அழுவதை நிறுத்தி விடும். அதற்காக அடித்தால் குழந்தை அழாது, அழுகையை நிறுத்திவிடும் என்ற தவறான நம்பிக்கை கொள்ளாதீர்கள். அடித்தால் அழும் குழந்தை மேலும் அழவே செய்யும். இதை முதலில் உணர வேண்டும். இல்லையேல் சின்ன வயதில் இருந்தே தன் மீது பெற்றோருக்கு அக்கறை இல்லை என்கிற நிலை அந்த வயதிலேயே பதிந்துவிடும்.
‘கலாட்டா கல்யாணம்’ என்ற படத்தில் அழும் குழந்தையை சமாளிக்க சிவாஜி கணேசன் படாதபாடுபடுவார். குழந்தையின் அழுகையை சமாளிக்கிற சீரியஸான விஷயத்தை சிரிப்பு கலந்து காட்டுவார்கள்.பெரும்பாலான குழந்தைகள் பசி வந்தால் மட்டுமே அழுகின்றன. அதனை தாய் மார்கள் உணர்ந்து பாலூட்ட வேண்டும். அப்போது தான் குழந்தை அழுவதை நிறுத்தி விடும். எந்த வேலையிருந்தாலும் அதை சற்று ஒத்தி வைத்து விட்டு அழும் குழந்தையை கவனிப்பதே ஒரு பெற்றோரின் முக்கிய கடமையாகும்.என்ன முயற்சி செய்தும் குழந்தை அழுகையை நிறுத்த வில்லை என்றால் மருத்துவரிடம் சென்று காட்டுவதே நல்லது. ஏனெனில் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருக்கலாம். கூடிய வரை குழந்தையை அழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை அழுது கொண்டிருந்தால் வீட்டின் அமைதியும், நமது நிம்மதியும் பறிபோய் விடும்.பல இளம் தாய்மார்கள் குழந்தையின் அழுகையாலேயே மன அழுத்தத்தை சந்திப்பதாக மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
“குழந்தையின் அழுகையும் இனிய சங்கீதம்” என்றால் அது நம்மிடம் செல்லமாக அழும்போது தான். ஆனால் அதுவே தொடர்ந்து நடந்தால் ஆரோக்கியம் கிடையாது.குழந்தைகள் அழுவது ஒரு இயல்பான செயல். ஆனால், குறைவாகவே சிறிது நேரம் அழுவதால் பிரச்னையில்லை; ஆனால் அதிகமாக அல்லது தொடர்ந்து அழும்போது சில உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். கீழே அதுபோன்ற சில முக்கியமான பிரச்னைகள் கொடுக்கப்பட்டுள்ளன: குழந்தை தொடர்ந்து அதிகமாக அழுவதால் ஏற்படக்கூடிய உடல்நல பிரச்னைகள்:
1. மூச்சுத் திணறல் (Breath Holding Spells)
சில குழந்தைகள் அதிகமாக அழும்போது மூச்சை தவறுதலாக நிறுத்தலாம். இது தற்காலிகமானது என்றாலும், பெற்றோருக்கு பயத்தை உண்டாக்கும். மேலும் சில குழந்தைக்கு மூச்சுத் திணறல் திடீர் அதிர்வை உண்டாக்கும்.
2. தலையில் அடர்ந்த இரத்த அழுத்தம் (Increased Intracranial Pressure)
நீண்ட நேர அழுகை தலைவலி, தலையில் அழுத்தம் போன்ற பிரச்னைகளைத் தூண்டக்கூடும். ஒரு சில குழந்தைகளில் அடர் இரத்த அழுத்தம் உருவாகவும் வாய்ப்புண்டு.
3. வாந்தி அல்லது குமட்டல் நிலை (Vomiting or Gagging)
அழும்போது தூண்டலாக வாந்தி வரக்கூடும், குறிப்பாக வயிறு நிரம்பியிருந்தால் குமட்டல், வாந்தி உண்டாகும்.
4. சோர்வு மற்றும் டிஹைட்ரேஷன் (Fatigue and Dehydration)
அதிகமாக அழுவதால் உடல் நீர் குறைந்து, தளர்வும் சோர்வும் ஏற்படலாம். மேலும் வறட்சியும் உண்டாகும்.
5. தலைசுற்றல் அல்லது மயக்கம் (Dizziness or Fainting)
ஓயாமல் அழுவதால் ஆற்றல் குறைந்து மயக்கம் ஏற்படக்கூடும். சில குழந்தைகளில் சொல்ல முடியாத தலை சுற்றலும் உண்டாகும்.
6. தொண்டை கசக்குதல் (Sore Throat)
நீண்ட நேரம் உரத்த குரலில் அழுதால் தொண்டை வலிக்கலாம். மேலும் புண் ஏற்பட்டு சுவை மாறலாம்.
7 புழுதி அல்லது காற்று புகுதல் காரணமாக இருமல்/மூச்சுப்பதிப்பு (Cough/Wheezing due to inhaled particles while crying)
அதிக அழுகையின் போது வலி தரும் சளி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படலாம். மேலும் அதிக நேரம் வாயைத் திறந்து குழந்தை கத்தி அழுகையில் தூசுகள் உள்ளே செல்லவும் வாய்ப்புகள் உண்டு.
8. சைனஸ் பிரச்னை உண்டாகும்
தொடர்ந்து அழும் குழந்தைகள் சிலருக்கு தலையில் நீர் கோர்க்கும் போது எதிர்காலத்தில் சைனஸ் பிரச்னையால் அவதியுறும் நிலையும் உண்டாகும்.
தொடர்ந்த அழுகைக்கு மனநல விளைவுகள்
* மனஅழுத்தம் அல்லது பாதுகாப்பு குறைபாடு – குழந்தை அழுகைக்கு சரியான எதிர்வினை இல்லாமல் இருந்தால், குழந்தை பாதுகாப்பின்றி இருப்பதாக உணரத் துவங்கும். மேலும் தனக்காக யாரும் இல்லையோ என்கிற ஏக்கம் அந்த வயதில் இருந்தே ஆரம்பித்து எதிர்காலத்தில் யாரையும் நம்பாத நிலை உண்டாகும்.
* தூக்கமின்மை – அதிகம் அழும் குழந்தைகளுக்கு சரியான தூக்கம் கிடைக்காமல் மற்ற உடல் வளர்ச்சியும் பாதிக்கலாம்.பெற்றோர் கவனிக்க வேண்டியவை
* குழந்தை அடிக்கடி, காரணமின்றி அல்லது வலி கொண்டிருப்பதுபோல் அழுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
* பசி, வயிற்றில், குடலில் பூச்சி, புழு தொல்லை, புறவளர்ச்சி வலி, அல்லது உடல் வெப்பம் போன்ற காரணங்களால் அழுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
* தொடர்ந்து பல மணி நேரம் அழுகிற குழந்தையை அலட்சியம் செய்யாமல் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.
– த. சத்தியநாராயணன்