மாணவர்கள் அரை வட்டத்தில் அமர்ந்திருந்தனர். கற்களை வைத்து வகுத்தல் கணக்குகளைச் செய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு மாணவன் மட்டும் எழுந்து கைகளை அசைத்து நடனமாடத் தொடங்கினான். நான் வியப்பாக அவனைப் பார்த்தேன். எனக்கு அருகில் அமர்ந்திருந்த மாணவன் மிகவும் கோபம் கொண்டு, ‘‘சார்! இப்படித்தான் ஏதாவது ஒன்று தெரிந்தா ஆட ஆரம்பிச்சிடுவான்.” என்றான். “சார்! ரகளைப் பண்றான்.” என்றான் மற்றொரு மாணவன்.இந்தச் செயலை வெளியில் இருந்து கவனிக்கும் எவரும் அவனை ‘‘ஆடுகாளி” என அழைக்கக்கூடும். ஆசிரியரிடம் பயமில்லை என்பார்கள். ஆசிரியரால் அவனை அடக்க முடியவில்லை என்பார்கள். குழந்தைகளின் வாழ்க்கை சாதாரணமானது. சிக்கலானதன்று. மகிழ்ச்சிகரமான… கவலையற்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது உடலைப் போன்று, உள்ளமும் வளர்ச்சியடைகிறது. உள்ளத்தில் ஏற்படும் இந்த உணர்ச்சித் தூண்டலுக்கு காரணமானவை எண்டோகிரைன் கிளாண்டுகள். உணர்ச்சிகள் எல்லா உயிர்களிடத்திலும் இருக்கின்றன. உணர்ச்சிகள் நிலையற்றவை. குறிப்பிட்ட ஒரு சிறப்பு இயல்பை பெறுகின்ற வரை மட்டும்தான் இவை நிலைத்திருக்கும். ஒருமுறை இந்த சிறப்பியல்பு வளர்ந்து விட்டால் இந்த உணர்ச்சி மறைந்துவிடும்.உணர்வுகள் குறிப்பிட்ட நடத்தைகளுக்கு ஒரு தூண்டுதலைத் தருகின்றன. அதனாலே, அந்த மாணவன் தனக்கு கணக்குப் புரிந்துவிட்டது அல்லது தெரிந்துவிட்டது என்ற உணர்வை பெற்றவுடன் நடனம் ஆடும் நடத்தையை மேற்கொள்கின்றான். இதனை ஒரு உதாரணத்துடன் விளக்கினால் இன்னும் தெளிவு பெறலாம்.
வண்ணத்துப்பூச்சியின் தாய் தன்னுடைய முட்டையை மரத்தண்டுக்கு அருகே உள்ள கிளைகளில் மறைவாக இடுகிறது. அந்த மறைவான இடத்தில் இருந்து முட்டைகள் வெடித்து சிறு புழுக்களாக வெளி வருகின்றன. இந்தப் புழுக்களுக்கு வேண்டிய இளந்தளிர்கள் உச்சிக் கொம்பில் உள்ளன.புழுக்கள் எப்படி உச்சி கொம்பிற்குச் செல்கின்றன? இச்சிறு புழுக்கள் வெளிச்சத்தைப் பொருத்த மட்டும் உணர்ச்சி பெற்றனவாய் இருக்கின்றன. வெளிச்சம் புழுக்களைக் கவருகிறது. மயங்குகிறது. வெளிச்சம் அதிகமாக உள்ள உச்சிக்கொம்பை அடைகின்றன.பசியால் வாடி மெலிந்த புழு முடிவில் தன்னைக் காத்து வளர்க்கக்கூடிய தளிர் மொக்குகளைத் தின்கின்றது. முதல் பருவம் முடிவடைகிறது. அப்போது, புழுவானது இந்த வெளிச்ச உணர்ச்சியை இழக்கிறது. இதுபோலத்தான், மாணவர்கள் உள்ளக் கிளர்ச்சியால் மேற்கொள்ளும் செயல்கள் குறிப்பிட்ட பருவத்தில் நின்றுவிடலாம். இருந்தாலும், அதனைத் தடுத்து முறைப்படுத்தும் பொறுப்பு ஆசிரியருக்கு உண்டல்லவா? குழந்தைகளைக் கண்டித்து வளர்க்க வேண்டாமா? இப்படியா வகுப்பறையில் நடனமாடுவது? என்பார்கள். டீவிரிஸ் ஆராய்ச்சி இதற்கான விளக்கத்தை அளிக்கும். புழுக்களை ஒரு இருண்ட பெட்டிக்குள் அடைக்கிறார். அந்த ஆய்வகத்தில் மரங்கள் இல்லை. இலைகள் இல்லை. அந்தப் பெட்டியின் ஒரு பக்கத்தில் இருந்துதான் வெளிச்சம் செல்ல ஏற்பாடு உண்டு. புழுக்கள் வெளிச்சம் வரும் திசையில் ஊர்கின்றன. சிலநாட்கள் இப்படியே செய்து கொண்டு போக, வெளிச்சம் புழுக்களைக் கவர்வதில்லை. புழுக்கள் இயற்கை உணர்வை பயன்படுத்துவதில்லை. புழுக்கள் வேறு திசைகளில் ஊர்கின்றன. வேறு வித வாழ்வைத் தேடுகின்றன.
சாப்பாட்டு ராமனாக இருந்த புழு இலைகள் கிடைக்கவில்லை என்பதால் உண்ணாவிரதம் பூண்டு தன்னைச் சுற்றிலும் ஒரு கூட்டை அமைத்து விடுகிறது. கூட்டுப் புழு தன்மை ஆகும். பின்பு அது வளர்ச்சி அடைந்து அழகும், வண்ணமும், பிரகாசம் பொருந்திய சிறகுகளைப் பெற்ற வண்ணத்துப் பூச்சியாக வெளிவருகிறது. குழந்தைகளின் பிரச்னைகளைப் புரிந்து கொள்வதற்கு மேற்கூறிய உண்மைகள் நமக்கு வழிகாட்டலாம் வெளியில் இருந்து பெரியவர்களால் செய்ய முயலும் எந்த செயலும் பயனளிக்கப் போவதில்லை. குழந்தை தன் உணர்ச்சி பருவங்களில் பல்வேறு சக்திகளைப் பெறுகிறது. அந்தச் சக்திகளால் வெளி உலகத்துக்கும் தனக்கும் சிறப்பான உயர்தரத் தொடர்பை அமைத்துக் கொள்கிறது. ஒவ்வொரு முயற்சியும் சக்தி பெருக்கமடைகிறது. இந்த உள்ளக் கிளர்ச்சியில் சில அழிந்த பிறகு வேறு சக்தி சுடர் விடுகிறது. இவ்வாறு குழந்தை ஒரு வெற்றியில் இருந்து மற்றொரு வெற்றிக்கு மாறுகிறது.
ஏதாவது ஒரு வெளி காரணம் குழந்தையின் அந்தரங்க ரகசிய வாழ்வை எதிர்க்கும்போது குழந்தையிடம் கடுமையான குழப்பங்களையும் விகாரங்களையும் நாம் காண முடியும்.
என் மகன், அவனது மேசையில் புத்தகங்கள், பேனாக்கள் தவிர வேறு பொருட்கள் இருப்பதை விரும்பமாட்டான். தப்பித் தவறி வேறு எதையாவது வைத்துவிட்டால், எரிந்து விழ ஆரம்பித்துவிடுவான். இந்தக் கோபம் நிரந்தரமாகிவிட்டது. ஒழுங்கற்ற தன்மையை காணும்போதெல்லாம் கோபம் வந்துவிடுகிறது. வகுப்பறையிலும் இதனைப் பார்க்கலாம். செருப்புகளைக் கழற்றி வரிசையில் வைக்க வேண்டும் என்பது ஒரு மாணவனின் எண்ணம். யாராவது செருப்பைத் தவறாக வைத்துவிட்டால் கோபப்படுவான். செருப்பை கழற்றி அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் என எறிந்துவந்தால் கோபம் மூக்குக்கு மேல் வரும். ‘‘சார்! செருப்ப தூக்கி எறிஞ்சிட்டு போறான். அப்புறம் செருப்பைக் குப்பையில் தூக்கி எறிந்துவிடுவேன்.” எனக் கத்துவான். அவனுக்கு கத்துவதும், கோபப்படுவதும் வாடிக்கையாகிவிடும். இக்காரணங்களால் ஏற்படும் குறைபாடுகள் வாழ்நாள் எல்லாம் நிலைத்திருக்கும். குழந்தையானது தன் உணர்ச்சிப் பருவங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளாமல் போனால் இயற்கையாக பெறக்கூடிய வெற்றியை இழக்கிறது. அவ்வாறு இழந்ததை மறுபடியும் பெற முடியாது. ஆகவே, குழந்தைகளின் உணர்ச்சிகளுக்கு இடமளிப்போம். புரிந்து கொள்ள முயல்வோம்… ஒவ்வொரு வெளிக்காட்டும் நடத்தைக்குப் பின் புரிந்து தெரிந்து கொள்ள வேண்டிய அரிய காரணம் ஒன்று இருக்கிறதென்று நாம் நமக்குள் சிந்திக்க வேண்டியிருக்கிறது. நம் குழந்தைகளிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கும் நம்மீது நம்பிக்கை ஏற்படும். குழந்தைகளும் பெரியவர்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டவர்களாக இருக்க வேண்டும். அது குழந்தைகளின் பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். குழந்தைகளின் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கு இடமளியுங்கள். காலப்போக்கில் அவர்களின் ரகளை மறைந்து போகும.
– க.சரவணன், சிறார் எழுத்தாளர்.