கடவுளை குழந்தையாகக் கருதி வழிபடுவதற்கு ‘வாத்சல்ய பாவம்’ என்று பெயர். குழந்தைகளின் விளையாட்டைக் காணும் போது சின்ன கண்ணனின் லீலைகளை நினைத்துக் கொண்டால் பக்தி மட்டுமில்லாமல் அளவற்ற அன்பும் வளரும் என்பார்கள். பொதுவாக குட்டி கிருஷ்ணன் மட்டுமில்லாமல் அவன் செய்யும் லீலைகளும் அனைவருக்கும் பிடிக்கும். கிருஷ்ணனுக்கு உலகமெங்கும் பல கோயில்கள் இருந்தாலும், பால கோபாலனாக குழந்தை வடிவில் அருளாட்சி புரியும் திருக்கோயில்கள் மிகவும் சொற்பமே. அத்திருத்தலங்களை பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்வோம்.
மதுராவில் உக்ரசேனர் ஆண்டு வந்த சமயம். மகள் தேவகிக்கும் வசுதேவருக்கும் திருமணம் நடந்தது. அசரீரி கூறிய படி அவர்களுக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை தன்னைக் கொன்று விடும் என்பதால் தேவகியின் சகோதரன் கம்சன் இருவரையும் சிறையில் அடைத்தான். தேவகிக்குப் பிறந்த ஏழு குழந்தைகளும் கம்சனால் கொல்லப்பட்டன.
சிராவண மாதம் கிருஷ்ண பட்ச அஷ்டமியன்று நடு இரவில் தேவகிக்கு எட்டாவதாக தெய்வக்குழந்தையாக கிருஷ்ணன் அவதரித்தான். அவன் தன்னை கோகுலத்திற்கு எடுத்துச் செல்லும்படி கூறவே. வசுதேவர் கண்ணனை ஒரு கூடையில் தலைக்கு மேல் வைத்து சிறையிலிருந்து கோகுலத்திற்கு கொண்டு சென்றார். இந்தக் காட்சியை மிக தத்ரூபமாக மதுராவில் ‘‘கிருஷ்ண ஜென்ம பூமி’’ என்ற இந்த இடத்தில் சித்திரரூபங்களுடன் தரிசனத்துக்காக வைத்திருக்கிறார்கள். அங்கே சிறை போன்ற சந்நதி அமைக்கப்பட்டு கிருஷ்ணனின் திருஉருவம் குழந்தை வடிவில் பூஜிக்கப்படுகிறது. மதுராவில் உள்ள பிரதான கோயிலில் உயர்ந்த பீடத்தின் மேல் மூன்றடி உயரமுள்ள ஸ்ரீபாலகிருஷ்ண விக்கிரகம் வட இந்திய பாணியில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுராவிலிருந்து கோகுலத்திற்கு எடுத்துச் செல்லும் போது, யமுனை நதியிலிருந்து கரையேறிய இடத்தில் ‘‘கரை சேர்ந்த மண்டபம்’’ என்று கிருஷ்ணன் கோயிலாக இன்றும் பூஜிக்கப்பட்டு வருகிறது. இங்கு மாலை வேலைகளில் தீபம் ஏற்றி கண்ணனுக்கும் யமுனைக்கும் பூஜைகள் செய்யப்பட்டு ஆரத்தி எடுத்து வழிபடுகிறார்கள். கோகுலத்தில் நந்த கோபனின் இல்லத்தில் கிருஷ்ணனை முதன் முதலில் தொட்டிலிலிட்ட இடத்தில் ‘கண்ணன் ஆடிய தொட்டிலை’ இன்றும் காணலாம். அங்கு பாலகிருஷ்ணனை பிரதிஷ்டை செய்து ஆலயமாக்கி வழிபடுகிறார்கள். ஜென்மாஷ்டமியன்று ‘‘ஊஞ்சல் உற்சவம்’’ சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் வெண்ணெய் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இங்கு வழிபட வரும் குழந்தைகள் மட்டுமே காணிக்கை செலுத்தி தொட்டிலை ஆட்ட அனுமதி மற்றவர்களுக்கு இல்லை.
பிருந்தாவனத்தில் கிருஷ்ணனுக்கு ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது கி.பி.1864-ல் கட்டப்பட்ட ‘‘பாங்கே பிஹாரி கோயில்’’. வட இந்திய சங்கீதத்தில் வல்லவர் மற்றும் தீவிர கிருஷ்ண பக்தருமான ஹரிதாஸ் என்பவரால் கண்டெடுக்கப்பட்ட சின்ன கண்ணன் சிலைதான் இந்தக் கோயிலின் கருவறையில் உள்ளது. இவ்வாலயத்தில் உள்ள குட்டி கிருஷ்ணனை ஒரு நிமிடத்திற்கு மேல் தரிசித்தால் மயக்கமடைந்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. கருமை வண்ணம், மயிற் பீலி அணிந்த முடி, பொற் கிரீடம், விசிறி போல் அமைந்த மாலைகள், கழுத்தில் மணிமாலைகள், பட்டுப் பீதாம்பரம் நீல நிறத்தில் தரித்து பிரேம சொரூபனாக ‘பால’ கிருஷ்ணன் இங்கே காட்சியளிக்கிறார்.
ராஜஸ்தானில் உதயபூருக்கு வடக்கே சுமார் 50. கி.மீ தொலைவில் உள்ளது கிருஷ்ணன் கோயில். பிருந்தாவனத்தில் எழுந்தருளியிருந்த இந்த இறைவனை அந்நியப் படையெடுப்பின் போது, கோஸ்வாமி தாவோஜி என்பவர், ராணா ராஜ் சிங்கின் உதவியுடன் கிருஷ்ண விக்கிரகத்தை மாட்டு வண்டியில் எடுத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது சக்கரம் மண்ணில் புதைந்து வண்டி நகர மறுக்கவே, இந்த இடமே இறைவனுக்குப் பிரியமான இடம் என உணர்ந்த தாவோஜி அங்கேயே விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளார். இடது கையால் கோவர்த்தன கிரியைச் சுமந்த படியும், வலது கையை இடுப்பில் ஒய்யாரமாக வைத்த படியும் அழகு தரிசனம் தருகிறார். கறுப்பு சலவைக் கல்லில் வடிக்கப்பட்ட இந்த விக்கிரகத்தில் இரண்டு பசுக்கள், இரண்டு மயில்கள், பாம்பு மற்றும் கிளி ஆகியவை உள்ளன. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மற்றும் அன்னக்கூட உத்ஸவம் மிகவும் விசேஷம்.
கர்நாடகாவில் உள்ள உடுப்பி தலத்தில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீபாலகிருஷ்ணன், இளமைக் கோலத்துடனும் தெய்வீக எழிலுடனும் விளங்குகின்றான். பால பருவத்தில் கிருஷ்ணன் செய்த திருவிளையாடல்களை காணவேண்டும் என்று தேவகி ஆசைப்பட்டாள். அதனால் அன்னை முன் தன் லீலைகளை நிகழ்த்திக் காட்டினான் கண்ணன். அதனை மறைவிலிருந்து பார்த்த ருக்மிணி, கணவனின் இளமை அழகில் மயங்கி தன் பூஜைக்கு அப்படியொரு சிலை வேண்டும் என்று பிரார்த்தித்தாள்.
கிருஷ்ணனும் தம் பால பருவத்தை நினைவுபடுத்துவது போல் ஓர் அழகிய சிலையை வடித்து தந்தார். அச்சிலையை ருக்மிணி தினமும் வழிபட்டு வந்தாள். கிருஷ்ணாவதாரத்தின் இறுதியில் அர்ஜூனன் இந்தச் சிலையை துவாரகை நந்தவனத்தில் ஒளித்து வைத்தான். அதனை தன் ஞான திருஷ்டியில் கண்டறிந்த மத்வாச்சார்யார், உடுப்பியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இரண்டடி உயரமுள்ள கிருஷ்ணன் சிலைக்கு தினமும் ஓர் அலங்காரம் செய்யப்படுகிறது. இங்கு பால கிருஷ்ணனை ஒரு ஜன்னல் வழியாகத்தான் தரிசனம் செய்ய வேண்டும்.
தாய்மை உணர்வுடன் ஆழ்வார்கள் போற்றும் சின்னஞ் சிறு குழந்தையாக குட்டி கிருஷ்ணன் காட்சி தரும் தலம் குருவாயூர். திருச்சூரில் சுமார் 20.கி.மீ தொலைவில் குடி கொண்டுள்ள குருவாயூரப்பன், கலியுகத்தில் கேட்டவருக்கு கேட்ட வரம் தந்தருளும் கண் கண்ட கடவுளாகக் காட்சி அளிக்கிறான். கிருஷ்ணஅவதாரத்தின் முடிவில் ஏற்பட்ட பிரளயத்தில் துவாரகை மூழ்கியது. அப்போது கண்ணனே தன் விக்கிரகத்தை தன் பரம பக்தரான உத்தவரிடம் கொடுத்து, தேவகுரு, வாயு பகவான் இருவரின் உதவியுடன் சிவபிரானின் ஆசியுடன் குருவாயூரில் பிரதிஷ்டை செய்தார். குருவும் வாயுவும் சேர்ந்து ஸ்தாபித்ததால் இது ‘குருவாயுபுரா’ என அழைக்கப்பட்டு ‘குருவாயூர்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது.
மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற முப்பெருமைகளால் அமையப்பெற்ற திருத்தலம் மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி கோயில். மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பரவாசு தேவப் பெருமாளாக நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கர, கதையுடன் தங்கக்கவசம் பூண்டு காட்சி தருகின்றார். கோகுலத்தில் குட்டி கிருஷ்ணன் ஆயர் வீடுகளில் வெண்ணெய் திருடித்தின்னும் வைபவத்தை சித்தரிக்கும் வகையில் வெண்ணெய்த்தாழி வைபவம் இங்கு நடைபெறுகிறது. திருவிழா அன்று ராஜ கோபாலன் தவழும் கண்ணன் வடிவு அலங்காரத்தில் கையில் வெள்ளிக் குடத்துடன் திருவீதி உலா வருகிறான். ஆவணி மாதம் ‘திருபவித்ரோத்ஸவம்’ என்று போற்றப்படும் விசேஷமான உற்சவம் பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும்.