பூந்தமல்லி: ஐயப்பன்தாங்கல் தெள்ளியார் அகரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ் (23). இவர், தெள்ளியார் அகரம் சாலையில் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது 5 பைக்குகளில் வந்த 10க்கும் மேற்பட்டோர், தமிழை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற அந்த கும்பல், அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த சூர்யா (25) என்பவரையும் தலையில் வெட்டியது.
மேலும் அந்த சாலையில் நின்று இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். பின்னர் அந்த கும்பல் அரிவாளை காட்டியவாறு, பொதுமக்களை அச்சுறுத்தி அங்கிருந்து தப்பியது. இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் சரிந்த தமிழை அக்கம் பக்கத்தினர் மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கே அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல், தலையில் வெட்டு காயம்பட்ட சூர்யாவும் போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். விசாரணையில், தமிழுக்கும் காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சபரி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் இருந்து வந்தாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சபரி தனது நண்பர்களுடன் வந்து தமிழை வெட்டி கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது.