Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆயுர்வேதத் தீர்வு!

நன்றி குங்குமம் டாக்டர்

நுரையீரல் அடைப்பு நோய் எனும் சி.ஓ.பி.டி ஆயுர்வேத தீர்வு!

புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது நாம் அன்றாட வாழ்வில் பார்த்து, கேட்டு, படித்து தெரிந்த வாக்கியங்களில் ஒன்று. ஆனால் இன்று அதனை கடைப்பிடிப்பவர்கள் ஒரு சிலரே! இந்தியாவை விட அயல்நாடுகளில் குறிப்பாக குளிர் தேசங்களில் இந்த புகைப்பிடித்தல் பழக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது. மேலும், இன்றைய காலகட்டத்தில் மாசடைந்த சுற்றுசூழல்களினாலும் நம் நுரையீரல் பாதிப்படைகிறது.

வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகை போன்றவற்றை சுவாசிப்பதாலும், புகைப்பிடித்தல் பழக்கத்தினாலும், நமக்கு நெருக்கமாக புகைப்பிடிக்கும் நபரிடமிருந்து வெளியேறும் புகையை அடிக்கடி நாம் சுவாசிக்க நேர்ந்தாலும் நம் நுரையீரல் படிப்படியாக பலவீனமடைந்து, அதன் செயல்பாடு குறைகிறது. இந்த நோயை நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (சி.ஓ.பி.டி) என்று நாம் அழைக்கிறோம். இந்த நோய் மூச்சுத்திணறலில் தொடங்கி ஒரு மனிதனின் உயிரை எடுக்கும் அளவிற்கு மிகவும் தீவிரமான நோயாக மாறும். இதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 65 மில்லியன் மக்கள் (சிஓபிடி) பாதிக்கப்படுகிறார்கள். மேலும் 2020 ஆம் ஆண்டில் உலகளவில் இறப்புக்கான மூன்றாவது முக்கிய காரணமாக நுரையீரல் அடைப்புநோய் (சிஓபிடி) நோயாளிகளுக்கு இதயநோய், நுரையீரல் புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், சளி, காய்ச்சல் மற்றும் நிமோனியா போன்ற பல்வேறு மோசமான நோய்கள் எளிதில் வரக்கூடிய ஆபத்து உள்ளது.

இந்தியாவில் நுரையீரல் அடைப்பு நோய் (சிஓபிடி), நுரையீரல் காசநோய்க்குப் பிறகு நுரையீரலை தாக்குகின்ற இரண்டாவது பொதுவான கோளாறாகக் கருதப்படுகிறது. இப்போதெல்லாம், இந்த நோய் நடுத்தர வயதினருக்கு அதிகமாக ஏற்படுகிறது. அதிகப்படியாக புகைப்பிடித்தால் நுரையீரல் அடைப்பு நோய் (சிஓபிடி) ஆண்களையே அதிகமாக பாதிக்கிறது. மேலும் 55-60 வயதையும் இறப்புக்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைவதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தியாவில் இது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சமமாக காணப்படுகிறது.

நுரையீரல் அடைப்பு நோய் (சிஓபிடி) என்பது கடுமையான நுரையீரல் அழற்சி நோய்களுக்கான கூட்டுச்சொல்லாகும். இது நாம் சுவாசிப்பதை கடினமாக்கி மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். நுரையீரலுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் முழுமையாக கிடைக்காத பட்சத்தில் நுரையீரல் அதன் செயல்திறனை வெகுவாகவே குறைத்துக் கொள்கிறது.

நுரையீரல் அடைப்புநோய் வரக் காரணங்கள்

புகைப்பிடித்தல் மற்றும் புகைப்பிடிப்பதன் மூலம் அருகில் உள்ளவருக்கு பரவும் காரணங்களுடன் ரசாயனங்கள் கலந்த, வாகனங்களின் புகை மற்றும் பிற புகைகளின் வெளிப்பாடு, காற்று மாசுபாட்டின் நீண்டகால வெளிப்பாடு, வீடுகளில் காற்றோட்டம் குறைவாக இருத்தல், எரிபொருளை எரிப்பதால் ஏற்படும் புகையை சுவாசிப்பது. நம் உடம்பில் ஆல்பா -1- ஆன்டிட்ரிப்சின் என்ற புரதத்தில் குறைபாடு, எப்போதும் குளிர்ந்த நீரையே உட்கொள்வது, குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் இருப்பது ஆகியவை நுரையீரல் அடைப்பு நோய் (சிஓபிடி) வர காரணமாக அமையலாம்.

நுரையீரல் அடைப்பு நோய் அறிகுறிகள்

முதலில், சிஓபிடியின் அறிகுறிகள் மிகவும் லேசானதாக இருக்கும். நாம் இந்த அறிகுறிகளை சளி என்று கூட தவறாக நினைக்கும் வாய்ப்புகள் உண்டு. அறிகுறிகள் படிப்படியாக மோசமாகி அதன் காரணமாக உடல் நிலையில் மேலும் பல பாதிப்புகள் ஏற்படலாம். நுரையீரல் மிகவும் சேதமடையும்போது கீழ்க்கண்ட அறிகுறிகள் வரலாம்.

மூச்சுத்திணறல் நெஞ்சு இறுக்கம்

சளியுடன் கூடிய நாள்பட்ட இருமல்

அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் அல்லது பிற சுவாச தொற்று

உடல் சோர்வு

கணுக்கால் அல்லது கால்களில் வீக்கம்

எடை குறைவது

புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் அல்லது தொடர்ந்து புகைபிடித்தால் அறிகுறிகள் மிகவும் மோசமாக மாறும்.

நுரையீரல் அடைப்புநோய் சிகிச்சை முறைகள்

நுரையீரல் அடைப்பு நோய் (சிஓபிடி) பொதுவாக இன்ஹேலர்கள் மற்றும் ஆன்டிபயாடிக்குகள் போன்ற மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டாலும், ஒரு நிரந்தரத் தீர்வு என்பது சமகால மருத்துவத்தில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால், ஆயுர்வேதம் மூலம் இந்த நிலையை நன்றாகவே நிர்வகிக்கலாம் என்பதை இன்று பல ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.

ஆயுர்வேதத்தில் நுரையீரல் அடைப்புநோய்

ஆயுர்வேதத்தில் சிஓபிடி என்பது பிரணவஹா ஸ்ரோதரோகம் என்று வகைப்படுத்தப்பட்டு ஸ்வாஸ ரோகம் என்கிற தலைப்பின்கீழ் விவரிக்கப்பட்டுள்ளது. இந்நோயால் வாத மற்றும் கபம் தோஷங்கள் பிரதானமாக காணப்படுகின்றது. எனவே இச்சிகிச்சையின் நோக்கம் அதிகப்படியாக நுரையீரலில் தேங்கி இருக்கும் கபத்தை வெளியேற்றுவதேயாகும். எனவே, ஆயுர்வேதம், சிஓபிடியின் சிகிச்சையில் உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதிலும், கேடடைந்த தோஷங்களை சமநிலைப் படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.

ஆயுர்வேத சிகிச்சை முறைகள்

ஆயுர்வேதத்தில் நிதானபரிவர் ஐனம் (காரணங்களை தவிர்ப்பது மற்றும் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையை மாற்றியமைப்பது) மற்றும் ஷோதன சிகிச்சையில் கீழுள்ள சிகிச்சை முறைகளை ஒரு தக்க ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை பெற்று முறையாக செய்தால் சிஓபிடி முற்றிலுமாக குணமடைய வாய்ப்புண்டு.

ஸ்வேதானம் (வேது பிடித்தல்)

வமனம், வாந்தி (வாந்திக்கு மருந்து கொடுத்தல்)

விரேசனம், பேதி (பேதிக்கு மருந்து கொடுத்தல்)

நஸ்யம் சிகிச்சை ஒவ்வொரு நாசியிலும் இரண்டு முதல் மூன்று துளிகள் அனு தைலம். ஷட்பிந்து தைலம் தினமும் விட்டு வந்தால், மூக்கின் சளிச்சுரப்பியில் எரிச்சல் அல்லது மாசுபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள்

ஒற்றை மருந்துகள் ஆர்த்ரகம் (இஞ்சி), ஏல (ஏலக்காய்), ஹரித்ரா (மஞ்சள்), திரிகடு (சுக்கு, மிளகு, திப்பிலி), அஜ்மோத(ஓமம்), அஜாஜி (சீரகம்), யஷ்டி ( அதிமதுரம்), வாசா (ஆடாதொடை), குடுச்சி (சீந்தில்), அதிவிஷா (அதிவிடயம்), ஆரக்வதம் (சரக்கொன்றை), கரஞ்சபீஜம் (புங்கவிதை), தருஹரித்ரா ( மரமஞ்சள்), லஷுனா (பூண்டு), ஹிங்கு (பெருங்காயம்)

சூரணம் தாலிசாதி சூரணம், சிரோபலாதி சூரணம் திரிகடு சூரணம், ஹரிதக்யாதி சூரணம்.

கஷாயம்- தஷமூல கஷாயம், சதமூலகடுத்திரய கஷாயம், கோஜிஹ்வாதி க்வதம்.

அரிஸ்டம் தஷமூலாரிஸ்டம், வாசாரிஸ்டம்.

ஆசவம் - கனகசவம், பிப்பலியாசசவம். மாத்திரை வ்யொஷதி வடகம், ஸ்வாசனந்தம் குளிகை, லவங்காதி வடிரச மருந்துகள் மஹாலட்சுமி விலாஸ் ரசம், ஸ்வாசகுடார ரசம், ஸ்வாஸ் காச சிந்தாமணி, கபகேதுரசம், லோகநாத ரசம், தாம்ர பஸ்மம், சுவர்ண பஸ்மம், சுவாசானந்த குளிகைலேகியம் வாசா லேகியம், கண்டகாரி லேகியம், சித்ரகஹரிதகி அவ்லேஹம், ரைபி குடம்.ரசாயன சிகிச்சை பிப்பலி ரசாயனம், ச்யவனப்ராஷம், அகஸ்ய ஹரிதகி, வியாக்ரி ஹரிதகி, ஹரித்ரா காண்டம், முதலியன ரசாயனமாக பயன்படுத்தலாம்.

கிட்டதட்ட அனைத்து வகையான சுவாசநோய்களிலும் பயன்படுத்தப்படும் மருந்துகள் இவை. இவை சிஓபிடியிலும் நல்ல பலனை அளிக்கவல்லது. இவை சளி உற்பத்தியை குறைத்து, மூச்சுக்குழாய் வீக்கத்தைப்போக்கி, நுரையீரலுக்கு பலத்தை அளித்து, சுவாசத்தை எளிதாக்கி, மூச்சுத்திணறலை குறைக்கின்றன. சளி அடர்த்தியாகவோ, வெள்ளையாகவோ, மஞ்சள் நிறமாகவோ அல்லது பச்சை நிறமாகவோ இருந்தாலும் கூட இம்மருந்துகள் நல்ல பலனளிக்கும்.

பொதுவாக இம்மருந்துகள் சிஓபிடி உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் நல்ல புத்துணர்ச்சி மற்றும் பலத்தை கொடுத்து சோர்வை போக்கி, அடிக்கடி வரும் பல்வேறு நுரையீரல்நோய் தாக்குதல்களை குறைக்கிறது.

உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள்

சிஓபிடியில், உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள், அறிகுறிகளைக் குறைத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.

புகை பிடிப்பதை தவிர்த்தல்

நன்கு காற்றோட்டமான, சுகாதாரமான சூழலில் இருத்தல்

யோகா, பிராணாயாமம் போன்றவைகளை கடைபிடித்தல்

எப்போதும் வெதுவெதுப்பான நீரையே பருகுதல்,

சரியான நேரத்தில் உணவை உட்கொள்வது,

இரவு உணவை 6-7 மணிக்குள் எடுத்துக் கொள்ளுதல் இவையாவும் சிஓபிடியின் சிக்கலைத் தடுக்க உதவும்.

யோகாசனம் மற்றும் பிராணாயாமம்

சுவாச அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துவதில் பிராணாயாமம் முக்கிய பங்கு வகிக்கிறது. யோகப் பயிற்சிகள் பல்வேறு முக்கிய உறுப்புகளை மறுசீரமைப்பதோடு, அவற்றைச் செயல்பாட்டிலும் வலிமையானதாக மாற்றுகின்றன. புஜங்காசனம், சவாசனம், ஷால்பாசனம், பச்சிமோதாசனம் ஆகியவை பயனுள்ள ஆசனமாகும். இது நுரையீரலின் ரத்த

ஓட்டத்தை சீர்படுத்துகிறது.

செய்ய வேண்டியவை (பத்தியம்)

தானியங்கள். கோதுமை, பழைய அரிசி, பார்லி

பருப்பு வகைகள் கொள்ளு

காய்கறி மற்றும் பழ வகைகள் பூண்டு, முள்ளங்கி, நார்த்தங்காய், திராட்சை

மற்றவை - ஆட்டுப்பால், மஞ்சள், இஞ்சி, கறுப்பு மிளகு, சுக்கு, தேன்.

செய்யக்கூடாதவை (அபத்தியம்)

தானியங்கள் மக்காச் சோளம்

பருப்பு வகைகள் உளுந்து, கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு

காய்கறி மற்றும் பழ வகைகளில் - உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கடுகு, வெண்டைக்காய்

மற்றவை மீன், தயிர், குளிர்ந்த நீர், எண்ணெயில் பொரித்தவை, இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவு.

புகை, தூசி, மாசுகள் மற்றும் மகரந்தங்கள் இவையாவையும் தவிர்க்க வேண்டும்.

மேலும், வீட்டில், ஸ்ப்ரே அல்லது டியோடரண்டுகளில் உபயோகப் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கிளீனர்கள் அல்லது ரூம் ஸ்ப்ரேக்கள் பயன்படுத்தப்படும் போது நோயாளி வீட்டிற்குள் இருக்கக்கூடாது.துடைத்தல் மற்றும் தூசி தட்டுதல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

தொகுப்பு: உஷா நாராயணன்