கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுத பூஜைக்காக பொரி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வருகிற அக்டோபர் 23 மற்றும் 24-ம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள மண்டிகளில் பொரி தயாரிக்கும் பணிகள் கடந்த 20 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பொரி பெங்களூரு மற்றும் தமிழகத்தில் வேலூர், சென்னை, சேலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ஆயுதபூஜையை முன்னிட்டு ஒரு நாளைக்கு சராசரியாக 450 மூட்டை பொரி தயாரிக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா [பரவல் காரணமாக பொரி தவிப்பு மற்றும் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் இந்தாண்டு வியாபாரம் நன்றாக அமையும் என பொரி உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே 100 லிட்டர் அளவு கொண்ட ஒரு மூட்டை பொரியின் விலை கடந்த ஆண்டை போலவே ரூ.400-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு படி பொரி ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் பொரி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு மழை குறைவாக இருப்பதால் பண்டிகைக்கான பொரி தயாரிப்பு பாதிக்கப்படாது என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.