சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி இன்று 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கும் விடுமுறை கிடைக்கிறது. இது தவிர சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு முதல் பருவ தேர்வு முடிந்து 10 நாட்கள் விடுமுறை தொடங்குகிறது. இப்படி தொடர் விடுமுறை வருவதால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் நேற்றைய தினமே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பொதுமக்கள் எந்த வித சிரமமின்றி செல்ல தமிழக அரசு சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது. அந்த வகையில் நேற்றைய தினம் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், நேற்று சென்னையில் இருந்து 80,000 பேர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இன்று சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கும், சென்ட்ரலில் இருந்து கோட்டயத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆயுத பூஜையையொட்டி தொடர் விடுமுறை வருவதால் சென்னையிலிருந்தும் மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்தும் அதிகளவில் பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்பட்டது. இதேபோல சென்னையை தவிர மற்ற இடங்களில் இருந்து 200 பேருந்துகளும் இயக்கப்பட்டது.
சென்னையில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்தும் நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு கோயம்பேட்டில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று சென்னையில் இருந்து மொத்தமாக 2,600 பேருந்துகள் வரை இயக்கப்பட்டது. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இன்று அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என்பதால் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2,000 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
* அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை
பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கான அதிகபட்ச கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்திருந்தாலும் ஒரு சில ஆம்னி பேருந்து நேரடியாகவே இணையதளங்களில் அதிக கட்டணம் நிர்ணயித்து வருகின்றனர். ஒரு சில பேருந்துகள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.


