நாகை: நாகை தாமரைக்குளம் தென்கரையில் ஓரணியில் தமிழ்நாடு பிரசார துவக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை வகித்து பிரசாரத்தை துவக்கி வைத்து திமுக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். இதைதொடர்ந்து அவர் அளித்த பேட்டி: நாங்கள் செல்லுமிடமெல்லாம் மக்கள் சிறப்பாக வரவேற்கின்றனர். அவர்கள் திமுக அரசின் திட்டங்களால் மகிழ்ச்சியடைவதாக கூறுகின்றனர். இதை தமிழக முதல்வரின் உழைப்புக்காக கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம்.
சில இடங்களில் கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையென கூறுகின்றனர். விடுபட்டவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மக்களின் நிறைகளை மட்டுமில்லாமல் குறைகளை கேட்டறிந்து அதை செய்து கொடுக்கிறோம். விமர்சனங்களை முதல்வர் வரவேற்கிறார். அப்போது தான் எங்களை திருத்திக்கொள்ள முடியும் என்று முதல்வர் கூறுகிறார்.
மக்களிடம் நேரடியாக முதல்வர் வீடியோ காலில் பேசுவதால் அவர்களின் குறைகளை நேரடியாக கேட்க வாய்ப்பு கிடைக்கிறது. மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் வீட்டுக்கும் சென்று பரப்புரை செய்கிறோம். அவர்களை சந்தித்து பாஜக தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகங்களை பிரசாரம் செய்கிறோம். அதை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். சாதி, மதம், கட்சி வேறுபாடின்றி அனைவரையும் சந்திக்குமாறு முதல்வர் சொல்லியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.