பொன்னேரி: மீஞ்சூர் காவல் நிலையத்தில், வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மீஞ்சூர் பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், காவல்துறை சார்பில் அனைத்து வியாபாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் சுதாகர் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், தீபாவளி உள்பட பல்வேறு பண்டிகை நாட்களில் நடைப்பெறும் திருட்டு, வழிப்பறி மற்றும் இணையவழி மூலம் பணம் இழப்பு உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களை தடுக்க வியாபாரிகளிடையே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பண்டிகை நாட்களில் மீஞ்சூர் கனரக வாகனங்களுக்கு தடை செய்ய வேண்டும். இப்பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாம்பல் ஏற்றி வரும் வாகனங்களை முறைப்படுத்த வேண்டும். போலீசாரின் தொடர் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வியாபாரிகள் வலியுறுத்தினர்.
பின்னர் இக்கோரிக்கைகள் தொடர்பாக வியாபாரிகளுடன் சேர்ந்து போலீசார் கலந்தாலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இப்பிரச்னைகள் குறித்து துரித நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் மீஞ்சூர் குற்றப்பிரிவு எஸ்ஐ பழனிவேல், அனும்பட்டு முத்தாலம்மன் கோயில் அறங்காவலர் ராஜேந்திரன், ஷேக் அகமது, முகமது அலி, அலெக்சாண்டர், முகமது தாரிக், அப்துல் அஜிஸ், வேல்ராஜ், அல்டாப், சம்சுதீன், ராஜேஷ், அபுபக்கர், நந்தியம்பாக்கம் சீனிவாசன் மகேஷ் உள்பட பல்வேறு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.