சென்னை: ‘ஜீரோ இஸ் குட்’ விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக நடந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 3 படைப்பாளிகளுக்கு ரூ. 3.50 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகையை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் நேற்று வழங்கினார். போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, சென்னை பெருநகர காவல் எல்லையில் விபத்தில்லா சென்னையை உருவாக்கும் வகையில், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர், ஆகஸ்ட் 6 முதல் 25ம் தேதி வரை, ‘ஜீரோ இஸ் குட்’ என்ற வாசகத்துடன் சென்னை முழுவதும் அனைத்து சிக்னல்களிலும் பதாகைகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.
மேலும், அனைத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் அவரவர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், சிக்னல்களில் ‘நில்-கவனி-செல்’ முறையாக பின்பற்றி ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும், கார்களில் சீட் பெல்ட் அணிய வேண்டும், சிக்னல்களில் மஞ்சள் நிற விளக்குகள் எரியும் போது வாகனத்தை எல்லை கோட்டுக்குள் நிறுத்த வேண்டும், 2 பேருக்கு மேல் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யக் கூடாது, பள்ளி வாகனங்கள் முறையாக போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து சிக்னல்களிலும், பள்ளி, கல்லூரிகளிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வந்தனர்.
அந்த வகையில் ‘ஜீரோ இஸ் குட்’ விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக, ‘இன்ஸ்டாகிராம்’ ரீல்ஸ் போட்டியை போக்குவரத்து காவல்துறை நடத்தியது. மொத்தம் 218 ரீல்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் படைப்பாளிகளால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இப் பதிவுகளை போக்குவரத்து உயர் காவல்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். அதில் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று அதிக லைக்குள் பெற்ற பிரவீன்குமார் என்பவரை முதல் பரிசுக்கு தேர்வு செய்தனர்.
இரண்டாவது பரிசுக்கு சதீஷ், 3ம் இடத்திற்கு சத்யாஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர், முதலிடம் பெற்ற பிரவீன்குமாருக்கு ரூ.2 லட்சமும், 2ம் இடம் பிடித்த சதீஷ்க்கு ரூ.1 லட்சமும், 3வது இடம் பிடித்த சத்யாஸ்ரீக்கு ரூ.50 ஆயிரம் என ரூ. 3.50 லட்சம் மதிப்பிலான பரிசு தொகைகளை வழங்கி கவுரவித்தார்.
* தொடர் விழிப்புணர்வால் விபத்துகள் குறைந்தன
போக்குவரத்து போலீசாரின் இந்த 20 நாள் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சென்னை சாலைகளில் எந்த உயிரிழப்பும் ஏற்படாததால், 6 நாட்கள் ஜீரோ உயிரிழப்பு நாளாக கருதப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் நடந்த விபத்துகளில் 41 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 28 இறப்புகள் மட்டுமே நேற்றுவரை பதிவாகி இருந்தது. இது 13 அபாயகரமான விபத்துகளின் குறைப்பை காட்டுகிறது. அதேபோல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 146 விபத்துகள் பதிவாகின. அதில் 56 விபத்துகள் கடுமையான காயங்களுடன் பதிவாகியுள்ளது.