பெரம்பூர்: தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மண்டலங்கள் அளவில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களை தேர்வு செய்து டிஜிபி மூலம் சிறப்பு கேடயம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு ஆண்டும் சிறந்த காவல் நிலையங்களுக்கு இவ்வாறு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையை பொறுத்தவரை கிழக்கு மண்டலத்தில் திருவல்லிக்கேணி காவல் மாவட்டம், மயிலாப்பூர் காவல் மாவட்டம், கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டம் என மூன்று காவல் மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 20க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் இயங்கி வருகின்றன. இதில், அயனாவரம் காவல் நிலையம் 2023-24ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் அயனாவரம் காவல் நிலையம் சிறந்த காவல்நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்த்தால் பொதுமக்கள் புகார்களை உரிய முறையில் விசாரிப்பது, பெரிய குற்ற செயல்களை உடனடியாக கண்டறிந்து குற்றவாளிகளை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவது, காவல் நிலையத்தில் வரும் பொதுமக்களை கனிவுடன் நடத்துவது, காவல்நிலையத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது, இரவுநேர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்வது மற்றும் வழக்குகளை முறையாக கையாள்வது போன்ற பல்வேறு விதிகளின் கீழ் இந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
அந்த வகையில், அயனாவரம் காவல் நிலையத்தில் கடந்த 2023-24ம் ஆண்டில் மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். குறிப்பாக, மனைவியே கள்ளக்காதலனை வைத்து கணவனை தீர்த்துக்கட்டிய வழக்கை மிகவும் நேர்த்தியாக கையாண்டு விபத்து என்று கூறிய வழக்கை கொலை என மாற்றி சன்பிரியா, அவரது காதலன் மற்றும் டிரைவர் என மூன்று பேரை அயனாவரம் போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர். இதேபோன்று மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய வழக்கில் கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த இரண்டு வழக்கிலும் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மிக விரைவாக விசாரணை நடத்தி இந்த இரண்டு வழக்குகளிலும் அயனாவரம் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் அயனாவரம் காவல் நிலையத்தில் 25 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று நிஜாம் புயலில் அயனாவரம் போலீசாரின் பங்கு பாராட்டும் படியாக இருந்தது. குறிப்பாக, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த காவலரின் உடலை மிகுந்த சிரமப்பட்டு மீட்டெடுத்தனர். மேலும் அந்த சமயத்தில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்த நிலையில் கர்ப்பிணி ஒருவரை வீட்டிலிருந்து மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தக்க நேரத்தில் அனுமதித்ததால் சுகப்பிரசவமானது. இதுபோன்ற சம்பவங்களில் அயனாவரம் போலீசாரின் பங்கு பலராலும் பாராட்டப்பட்டது. இதேபோன்று, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 101 பூத்துகளில் எந்தவித பிரச்னையுமின்றி சுமுகமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதற்காக முன்கூட்டியே அயனாவரம் இன்ஸ்பெக்டர் தலைமையில் அனைத்து பூத்துகளிலும் ஜிபிஆர்எஸ் கேமரா உடன் பல்வேறு சிறப்பு வசதிகள் தனியாக செய்யப்பட்டன. இதேபோன்று, ஜெர்மனியில் இருந்து காவல் நிலையங்களை ஆய்வு செய்ய வந்திருந்த குழுவினர் பல்வேறு காவல் நிலையங்களை ஆய்வு செய்தனர். அயனாவரம் காவல் நிலையம் சிறந்த முறையில் இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கனிவுடன் வரவேற்று அவர்களிடம் முதலில் மனுக்களை பெற்று அதன் மீது உடனடி தீர்வு காண்பது, நாம் இருக்கும் இடத்தையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது, தினமும் அதற்காக சில மணித்துளிகள் செலவு செய்வது, இப்படி என்றாவது ஒருநாள் செய்யாமல் தினமும் இந்த வேலைகளை செய்து வந்தது, மாலை மற்றும் இரவு நேரங்களில் கண்டிப்பாக ரோந்து பணிகளை தவறாமல் காவலர்கள் மேற்கொண்டதன் பலனாக கடந்த ஓராண்டில் எங்களது காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என அயனாவரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பரணிநாதன், உதவி கமிஷனராக முத்துக்குமார் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.